முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.
வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் தேதியை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். எனவே, மே 18 ஆம் திகதியினை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை உலக தமிழ் மக்கள் அனைவரும் இன அழிப்பு நாளான மே 18 ஆம் தேதியினை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறும் கோர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் அனந்தி சசிதரன் பிரேரணையை சபையில் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டபடி, மே 18ஆம் தேதியினை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்படுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் அறிவித்தார்.