காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் ‘நாளை நமதே நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்துடன் புரட்சிப் பயணம் தொடக்க விழா, இன்று மாலை 6.30 மணிக்கு கலியனூர் கிராமத்தில் நடைபெறத்தொடங்கியது. ஆனால் அங்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால், பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் பலரும் சிதறி ஓடினர்.
இன்னும் சிலரோ, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த டென்ட் பகுதிகளிலும் மேடைகளிலும் தஞ்சமடைந்தனர். மேலும் சிலர் உட்கார போட்டிருந்த நாற்காலிகளைக் குடையாய்ப் பிடித்தபடி நின்றிருந்தனர். தொடர்ந்து மழை காரணமாக அங்கிருக்கும் பலரும் அவதியுற்றனர். எனினும், பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்றுவதற்காக ஓபிஎஸ் மழையையும் பொருட்படுத்தாது மேடைக்கு வந்து சேர்ந்தார்.
மழையில் அவர் நனையாமல் இருக்க நிர்வாகிகள் சிலர், அவருக்குக் குடை பிடித்து அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவருக்குப் பின் சென்றவர்களும் பார்வையாளர்களும் மழையில் நனைந்தபடியே இருந்தனர். மேடையை நோக்கிச் சென்ற அவரை தொண்டர்கள் வரவேற்று மகிழ்ந்தனர். மேடையில் போய் அமர்ந்த அவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிர்வாகிகள் பலரும் அவரை வரவேற்றுப் பேசினர். எனினும், தொடர்ந்து கனமழை பெய்தபடியே இருந்ததால், ஓ.பன்னீர்செல்வம் தொடங்கவிருந்த புரட்சிப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூட்டம் தடைபட்டதாகவும், விரைவில் இக்கூட்டம் மீண்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.