தமிழ்தேசிய ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின்முக்கிய வழக்குகளில் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், நாம் தமிழர் கட்சி தடா சந்திரசேகரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் காலமானார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை. விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி. இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன். நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர். பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மூத்தவர்
ஐயா தடா நா.சந்திரசேகரன் அவர்கள் 14-08-2023 அன்று மாலை 6 மணியளவில் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்!
ஐயாவின் மறைவையொட்டி, பெருந்துயரின் அடையாளமாக கட்சியின் அனைத்து மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், கிளை அலுவலகங்களிலும், பாசறை அலுவலகங்களிலும், கட்சியின் அனைத்து கொடிக் கம்பங்களிலும் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தடா சந்திரசேகரனின் மறைவு தமிழ்தேசிய ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “வழக்கறிஞர் தடா சந்திரசேகர் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருருகிறேன். என் மீது எப்போதும் அன்பை பொழிபவர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக காவல்துறை என்னை கைது செய்த போது நீதிமன்றத்திற்கு வந்து ஆறுதலாக நின்றவர். கடவுச்சீட்டு முடக்கப்பட்ட போது வழக்குக்காக ஆஜரானவர். அண்ணன் தடா சந்திரசேகர் அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியும் ட்விட்டரில் தடா சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது, “எனது மூத்த வழக்கறிஞரும் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிய பெரும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அண்ணன் தடா சந்திரசேகர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.