மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மருத்துவர்கள் பெண் ஒருவரின் மூளையில் உயிருள்ள 3 அங்குல நீளமான புழு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
கென்பராவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற சத்திர சிகிச்சையில் 64 வயதான நோயாளியின் சேதமடைந்த முன் மடல் பகுதியில் இருந்து இந்த புழு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, திடீரென ஞாபக மறதி மற்றும் மனச்சோர்வுக்கு இலக்கான அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த நரம்பியல் மருத்துவர்கள் அவரது மூளையின் வலது முன்மடல் விநோதமாக தோற்றமளிப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்தே மூளை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சைக்குப் பின்னரும், அந்தப் புழு இன்னும் உயிருடன் நெளிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சிவப்பு ஒட்டுண்ணி இரண்டு வாரங்கள் வரை மூளையில் இருந்திருக்காலம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்புழு மலைப்பாம்பு ஒன்றிடமிருந்து மரக்கறி அல்லது கீரை ஒன்றின் வழியாக வெளியாகியிருக்கக்கூடும் என்றும் அதனை குறித்த பெண் தொட்டு அல்லது சாப்பிட்டிருக்கக்கூடும் என்றும் ஊகிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்த புழுக்கள் அவுஸ்திரேலியாவின் சில மாகாணங்களில் மட்டுமே உள்ள ஒருவகை மலைப்பாம்புகளின் வயிற்றுக்குள் மட்டுமே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோய், மூளை நிபுணர்கள் அந்தப் பெண்ணை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.