மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் சுயநலமானவை. உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர்வாழ்வாகிறது. உயிரை உயிருண்ணாவிட்டால் இந்தப் பூமிப்பந்தில் எந்த ஜீவராசியும் இப்போது வாழ்ந்துகொண்டிருக்க முடியாது.
தற்காப்பு-ஆக்கிரமிப்பு இந்த இரண்டுமே மனித குல வரலாற்றில் நிரந்தரமானவை. “”யுத்தத்தில் மரணித்தவனுக்கே யுத்தம் இறுதியானது. உயிர் வாழ்பவர்களுக்கு யுத்தம் தொடர்கதையானது”” என்ற பிளேட்டோவின் கூற்று எத்துணை ஆழமான மனிதகுல அரசியல் நடத்தையை போதிக்கிறது.
தற்காப்பு – ஆக்கிரமிப்பு என்ற இரண்டையும் அனைத்துவிதமான மதபோதனைகள், தர்மபோதனைகள், ஜனநாயக போதனைகள், சோசலிச போதனைகள், மனித உரிமைப் போதனைகள், தத்துவங்கள், கோட்பாடுகள், பிரகடனங்கள் என அனைத்தும் தமது தேவைக்கேற்ப அனுசரிக்கின்றன, ஆதரிக்கின்றன, ஏற்றுக்கொள்கின்றன. தற்காப்பு – ஆக்கிரமிப்பு என்ற இரண்டிற்குள்ளும் மனிதநடத்தைகள் இனைத்தும் அடங்குபவையாக, இவற்றிற்கு கட்டுப்பட்டவையாகவே என்றும் இருக்கும். எனவே அரசியலையும், யுத்தத்தையும், உயிர்வாழ்வையும் தற்காப்பில் இருந்தும் ஆக்கிரமிப்பில் இருந்தும் அடையாளம் காணவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும்.
இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் உலக ஒழுங்கு குலையத் தொடங்கிவிட்டது (Decomposing). அவ்வாறு குலைந்து கொண்டிருக்கும் உலக ஒழுங்கைக் கூட்டி கட்டுவதற்கான(New composition) முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த முயற்சிகள் இந்த நூற்றாண்டில் பிரதானமான மூன்று யுத்தங்களை பிரசவிக்க வைக்கும் என்பது தவிர்க்க முடியாது. இது தர்க்கரீதியான படிநிலை வரலாற்று வளர்ச்சிப் போக்கின் விளைவு.
இவை தற்காப்பு – ஆக்கிரமிப்பு என்ற இரண்டின் அடித்தளத்தில் இருந்து தோற்றம் பெற்று முன்னோக்கி நகர்வதை தடுக்கவோ தவிர்த்திடவோ முடியாது. அதில் முதலாவது பெருயுத்தம் (Big war) உக்ரையினில் ஆரம்பித்துவிட்டது. இந்த யுத்தம் ரஷ்யாவை பொறுத்த அளவில் அதன் புவிசார் அரசியலுக்கான தற்காப்பு யுத்தமாகும்.
அதாவது ரஷ்யாவின் பாதுகாப்பு முன்னரங்கத்தை தொடர்ந்து பாதுகாத்துப் பேணுவதற்கான யுத்தமாகும். ஆனால் இந்த யுத்தத்தின் தேவை மேற்குலகை தலைமை தாங்கும் அமெரிக்காவுக்கு தேவையாகவே உள்ளது. அமெரிக்கா தொடர்ந்து இந்த உலகத்திற்குத் தலைமை தாங்குவதற்கு ரஷ்யாவை அதனுடைய பிராந்தியத்துக்குள் முடக்க வேண்டியது அவசியமானது. ஐரோ-ஆசிய பகுதிகளில் ரஷ்யா செல்வாக்கு செலுத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை. அது அமெரிக்காவின் உலகம் தழுவிய அரசியல், வர்த்தக நலனுகளுக்கு ஆபத்தானதும்கூட.
இன்நிலையில் ஐரோ- ஆசிய பகுதியை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்த உலகை ஆளமுடியும் என்று வலியுறுத்திக் கூறும் ““இருதய நிலக்கோட்பாடு (Heartland theory) ““ இந்த இடத்தில் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.
இருதய நிலக்கோட்பாடு (Heartland theory) என்றால் என்ன? என்பதை பற்றி சற்று பார்த்து விடுவோம். பிருத்தானியாவை சேர்ந்த புவியியல் அறிஞரான கல்போர்ட் ஜோன் மைக்கிண்டர் (Halford John Mackinder) 1904ம் ஆண்டு முழு உலகம் தழுவிய ஆளுகைக்கான மூலோபாயக் கோட்டாக (பூகோள அரசியல்) ஒன்றை வெளியிட்டார். அதுவே இருதயநிலக் போட்பாடு என அழைக்கப்படுகிறது.
இருதய நிலம் எனப்படுவது மத்திய ஐரோ- ஆசிய பகுதியும் மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கிய பகுதியை மூலோபயர ரீதியில் உலகின் “”இருதயநிலம்“” (Heartland ) என அழைத்தார். ஏனெனில் இந்த நிலப்பரப்பை யார் ஆள்கிறார்களோ, கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களினால் ஆசியா ஆபிரிக்கா ஐரோப்பா கண்டங்களையும் அத்தோடு இந்து, பசுபிக் , அத்திலாந்தி சமுத்திரங்களையும் கட்டுப்படுத்த முடியும். இந்து சமுத்திரத்தையும் அட்லாண்டிக் சமுத்திரத்தையும் கட்டுப்படுத்துவதற்கு இந்த இருதய நிலப் பகுதி இன்றியமையாதது. இப்ப பகுதியை யார் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்களோ அவர்களால் இந்த உலகத்தை ஆளவும், கட்டுப்படுத்தவும், நிர்ணயம் செய்யவும் முடியும் என மைக்கின்டர் தனது புவியியல் அறிவின் ஊடாக பூகோளம் தழுவிய ஆக்கிரமிப்பு, ஆளுகை மேலாண்மை மூலோபாயம் ஒன்றை முன்வைத்தார். அதுவே இருதய நிலக்கோட்பாடு (Heartland theory) எனப்படுகிறது. அது மேற்குலக மனநிலையில் அவர்களுக்கு பொருத்தமானதும் சரியானதும் கூடத்தான்.
மைக்கிண்டர் இருதயநிலக் கோட்பாட்டை வெளியிடுவதற்கு முன்னர் நடைமுறையில் இரு ஐரோப்பியர்கள் பிரயோகித்துப் பார்த்துள்ளனர். மசிடோனியாவில் பிறந்த கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் (கி. மு. 332 – கி. மு. 323) பிரயோகித்து பார்த்தார் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றினார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் குறுகிய காலத்திற்குள் தனது இளவயதில் மரணிக்க நேர்ந்து விட்டது. அதேபாணியில் பின்னாளில் பிரான்சிய மன்னன் நெப்போலியன் முயன்று தோற்றுப் போனார்.
இக்கோட்பாடு 1904 ல் வெளியிடப்பட்ட பின்னர் ஜெர்மனிய சர்வதிகாரி அடல்ட் ஹிட்லர் முயன்று இருதய நிலத்தை கைப்பற்றினாலும் அதனைத் தொடர்ந்து தக்க வைப்பதில் தோல்வியடைந்து அழிந்து போனார். இவ்வாறு 3 ஐரோப்பியர்களும் ஆக்கிரமிப்பும், அதன் பின்னன அணியமைத்தல், தற்பாதுகாப்பு அகியவற்றின் முகாமைத்துவ பலவீனமே தோற்றதற்கான காரணங்களாயின.
இருதயநில கோட்பாட்டை மனதிற் கொண்டு சோவியத் யூனியனை இருதயநிலத்தில் கட்டுப்படுத்துவதற்காக இரண்டாம் உலக யுத்தத்தின் பின் 1949 -ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் நேட்டோ(NATO) எனப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) NATO அணி உருவானது.
1955ல் NATO கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றி இருதயநிலத்தில் மேலாண்மை செய்வதற்கா கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் ஹங்கேரி, போலந்து, ருமேனியா, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, கிழக்கு ஜெர்மனி, அல்பேனியா (1968 வரை) வார்சோ ( Warsaw ) ஆகிய 7 நாடுகள் இணைந்து வார்சசோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 36 ஆண்டுகள் நீடித்த வார்சோ 1991 ல் பனிப்போரின் முடிவில் இவ்வமைப்பு கலைந்துவிட்டது.
இதனை தொடர்ந்து 20-ஆம் நூற்றாண்டு இறுதியில் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஏழு இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒரு கூட்டணியை உருவாக்கினர். இந்நாடுகளுக்கு பொதுவான யூரோ என்ற நாணயத்தை அமெரிக்க டொலருக்கு நிகராக அல்லது எதிராக உருவாக்கினர். இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் 21 நாடுககள் இணைந்திருகின்றன. இதனை ஒரு நீண்ட வரலாற்றுப் போக்கு ரீதியாக நோக்கினால் கிரேக்க, உரோமானிய பேரரசுகளின் அன்றைய நிலப்பரப்பை இணைத்து ஐரோப்பிய ஒன்றியம் என்ற பேரரசு விஸ்தரிப்பாகவே பார்க்கப்பட வேண்டும். இது முழுமையாக நிலத்தொடர் அமைவு காரணமாக இருதயநிலத்தை கட்டுப்படுத்தும் வல்மைவாய்ந்ததாக அமையும் என்பது மறுப்பதற்கில்லை.
ஐரோப்பியர்கள் தாங்கள் கடந்தகால இழந்துபோன பெருமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் உலகின் வளங்களை கைக்கொள்ளவும் மைக்கிண்டரின் இருதயநிலக் கோட்பாட்டை கையில் எடுத்து செயற்படுகின்றனர் என்பதே உண்மையாகும்.. அதே நேரத்தில் இந்த உலகை தலைமை தாங்குவதற்கு அமெரிக்காவும் இந்த இருதய நிலத்தை தன்னுடைய செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருக்கவே முனைகிறது.
மேற்கே ஐரோப்பியர்களின் (முக்கியமாக ஜேர்மன், பிரான்ஸ்) உலகம் தழுவிய அதாவது பூகோள அரசியலை பின்னோக்கி தள்ளுவதற்கு உக்ரேயின் யுத்தம் அமெரிக்காவுக்கு பெரிதும் உதவி உள்ளது. ஐரோ – ஆசியப் பகுதியில் முறுகல் தொடர்ற்து இருப்பது இப்போது அமெரிக்காவுக்கு வாய்ப்பாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகம் தழுவிய அரசியலை மேலும் ஒரு 20 ஆண்டுக்கு உக்கரையின் யுத்தம் பின்னோக்கி தள்ளிவிட்டது என்பதுதான் உண்மையாகும்.
எது எப்படி இருப்பினும் அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் மேற்குலகம் என்ற அணியைச் சார்ந்தவர்கள்தான். இந்த மேற்குலகம் 30 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ இராணுவக்கூட்டு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டு கொண்டே வருகிறது. அதனூடாக மேற்குலகம் பலம்வாய்ந்த இராணுவ அணியை கொண்டுள்ளது. இவர்கள் தங்களுக்குள்ளே எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த இந்த உலகத்தை ஆளுவதில் மூலவளங்களை சூறையாடுவதிலும் தமக்கிடையே அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு பங்கீடுகளை செய்துகொள்வார்.
எனவே உக்ரையின் யுத்தம் என்பது ரஷ்யாவின் புவிசார் அரசியல் என்ற அடிப்படையில் தனது தற்பாதுகாப்புக்கான யுத்தமாக அமைகிறது. அதே நேரத்தில் உக்ரையினை பொறுத்தளவில் இது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தமாகவே பார்க்கப்படும். சமநேரத்தில் இந்த யுத்தத்தை விரும்பும் அமெரிக்காவுக்கு உலகம் தழுவிய அரசியலை நிலை நாட்டுவதற்கும், உலகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதற்கும் இது ஒரு பதிலாள் யுத்தமாகவே( Proxy war) அமைகிறது. இந்த யுத்தத்தை அமெரிக்கா தனது பதிலாள் யுத்தமாக. உக்ரைனையும் மேற்கு ஐரோப்பாவையும் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்த உலக ஒழுங்கை மாற்றுவதற்கான இரண்டாவது யுத்தம் சீனாவின் புவிசார் அரசியலுக்கான, தற்பாதுகாப்புக்கான யுத்தம் ஒன்று தென் சீனக் கடலில் சீனாவினால் தாய்வான் தீவை கைப்பற்றுவதற்கு அல்லது தனது பிடியின் கீழ் கொண்டு வருவதற்காக நிகழும். அந்த யுத்தத்தை சீனாவின் பார்வையில் தற்காப்பு என்றும் உலகின் பார்வையில் ஆக்கிரமிப்பு என்றும் கொள்ளப்படும். எனினும் இந்த தற்காப்பு – ஆக்கிரமிப்பு என்ற இரண்டையும் அவரவர் நிலையிலிருந்து உலக அரசுகள் ஏற்றுக்கொள்ளும், கீழ்ப்படியும், சகித்துக் கொள்ளும். இதுவே உலக அரசியல் ஜதார்த்தம்.
மூன்றாவது பெருயுத்தம் இந்து சமுத்திரத்தின் ஆளுகைப் போட்டிக்காக நிகழும். மேற்குலகு -ரஷ்யா – சீனா என்ற முப்பரிமாண உலகளாவிய அரசியலில் ரஷ்சிய தனது் பிரந்தியத்துக்குள்ளேயே இன்னும் குறுங்காலத்திற்கு நின்றுகொள்ளும்.
எனவே அடுத்து மேற்குலகம்-சீன என்ற இரு அணிகளுக்கு இடையில் இந்து சமுத்திரத்தை பங்குபோடுவதில் போட்டோ போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் இந்து சமுத்திரத்தை நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய புவியியல் சாதகத்தன்மையும் சீனாவின் இந்துசமுத்திர நுழைவை கட்டுப்படுத்தும் வல்லமையும் இந்தப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கு மட்டுமேயுண்டு. இந்தியாவின்றி இந்துசமுத்திரத்தில் மேற்குலகினால் சீனாவை எதிர்கொள்முடியாது. அந்தவகையில் மேற்குலகத்தின் பதில் ஆள் யுத்தத்தை இந்தியாவே இந்துசமுத்திரத்தில் நடத்தவேண்டியிருக்கும். எனவே மேற்குலகத்தினர் தமது பூகோளம் தழுவிய அரசியல் நலன்களை அடைவதற்கு இந்தியா அத்தியாவசியமானது.
இந்திய வரலாற்றில் கடல் கடந்து போரிட்டு சாம்ராஜ்யங்களை உருவாக்கியவர்கள் சோழர்கள்தான். வட இந்து சமுத்திரத்தின் மையப் பகுதியை நோக்கி முனையாக நீட்டிக் கொண்டிருக்கும் இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடியில் 10ம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யம் பெருவளர்ச்சி கண்டது.
அதன் வளர்ச்சிக்குக் காரணம் உள்நாட்டு உற்பத்தியும் வெளிநாட்டு வர்த்தகமும் பெரு வளர்ச்சியடைந்தன . உலகின் முதலாவது பட்டையம் அளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் (chartered company) அதாவது காப்பிரேற் கம்பெனிகள் இவற்றினை அன்று சோழ நாட்டிலே “”வர்த்தக கணங்கள்““ அல்லது கணங்கள் என்று அழைத்தனர். நானாட்டார் கணம், நாநூற்றுவர் கணம் என்பன பிரபலமானவை. அன்று வர்த்தக கம்பெனிகளுக்கு தனிப்பட்ட படைகளை வைத்திருப்பதற்கு அரசு அனுமதித்துப் பட்டயம் வழங்கியிருந்தது. இவ்வாறு சோழ நிறுவனங்களின் பெரும் வளர்ச்சி வங்கக் கடலை தமிழன் கடலாக மாற்றி அமைத்தது.
இந்த சமுத்திரம் தமிழர்களின் கட்டுப்பாட்டுங்கள் வந்ததனால் கடல் கடந்து சாம்ராஜ்யங்களை உருவாக்கவும் பெரும் செல்வங்களை சோழ நாட்டுக்கு கொண்டு வரவும் காரணமாக அமைந்தது. கடல் வர்த்தகத்தால் ஈட்டப்பட்ட பெரும் செல்வமும் நாடுகளை கைப்பற்றியதால் பெறப்பட்ட செல்வமும் சோழ சாம்ராஜ்யத்தை ஒரு மகோன்னத நிலைக்கு இட்டுச் சென்றது. இதனையே இன்று சுருக்கமாக சோழர்களின் “”கடல்கொள்கை”” என அரசியல் ஆய்வாளர்கள் வரையறை செய்கின்றனர்.
இந்த கடற் கொள்கையில் இன்றைய வங்கக் கடலும் அராபியக் கடலும் சோழர் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்தன. இதுவே இன்றைய இந்தியாவின் கடற் கொள்கையாக அதாவது புவிசார் அரசியலாக இருக்கவேண்டும். அதுவே இந்தியாவை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு கொள்கையாகவும் அமையும்.
எனவே இந்து சமுத்திர அரசியலில் இந்தியா தவிர்க்கப்பட முடியாத சக்தி என்ற அடிப்படையிலும் இந்தியாவின் பாதுகாப்பு வலையத்துக்குள் இலங்கை தீவு இருப்பதாலும் ஈழத்தமிழர் இந்தியாவை புறந்தள்ளியோ , இந்தியா ஈழத் தமிழரைப் புறந்தள்ளியோ செயற்படுவது சாத்தியப்பட முடியாது.
இலங்கைத்திவின் 67% கடற்பரப்பு ஈழத்தமிழரின் தாயகத்திற்குள் அடங்குவதும், இப்பிராந்தியத்தின் கேத்திரத்தானத்தில் இருப்பதுவும் இந்து சமுத்திப்பாதுகாப்பில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கனதியான பங்கும், பாத்திரமும் உண்டு. அதுவே ஈழத்தமிழர் விடுதலுக்கான முதலீடும் அடித்தளமுமாகும். எனினும் இந்தியாவின் அனுமதியின்றி மேற்குலகு ஈழத்தமிழர் விவகாரத்தில் நேரடியாக தலையிடவும் மாட்டாது. இந்நிலையில் பன்னாட்டு அரசியலில் மேற்குலகையும், பிராந்திய அரசியலில் இந்தியாவையும் தந்துரோபாய ரீதியில் அணிசேர்ந்து கையாள்வதன் மூலமே ஈழத் தமிழர் விடுதலையை சாத்தியமாக்க முடியும்.
-தி.திபாகரன், M. A.
31-08-2023.