சீனாவின் புவிஇயற்பியல் ஆராய்ச்சிக்கப்பல் சியான் ஆறு புதன்கிழமை முதல் இலங்கை துறைமுகத்தில் தரித்துநிற்கின்றது.சனிக்கிழமை வரை அந்த கப்பல் அங்கு தரித்து நிற்க்கும் என வெளிவிவகார அமைச்சினை மேற்கோள்காட்டி ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவின் புவிஇயற்பியல் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கையில் தரித்து நிற்பதை தொடர்ந்து இந்து சமுத்திரத்தில் சீனாவின் சட்டபூர்வ விஞ்ஞான நடவடிக்கையை அரசியல்மயப்படுத்துவதை கண்டித்துள்ள ஆய்வாளர்கள் இவ்வாறான கருத்துக்கள் இந்தியாவின் பிராந்திய மூலோபாயத்திற்கு உதவும் நோக்கத்திலானவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
செப்டம்பரில் குவாங்சோவிலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் 13 நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் நிபுணர்கள் உள்ளனர் அவர்கள் 80 நாட்களில் 28 கடல்கடந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என சின்குவா தெரிவித்துள்ளது.
வெப்பமண்டல கிழக்கு இந்திய பெருங்கடலில் மாறும் செயல்முறைகள் பொருள் சுழற்சி மற்றும் உயிர் புவியியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு போன்ற விடயங்கள் குறித்த இந்த ஆராய்ச்சியின் போது கவனம் செலுத்தப்படும்.
எனினும் இந்துஸ்தான் டைம்சின் செய்தியொன்று இந்த கப்பல் இரண்டு நோக்கங்களை கொண்டது இந்த கப்பல் கடல்சார் ஆராய்ச்சிக்கு மாத்திரமில்லை இந்து சமுத்திரத்தில் எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிகளை பயன்படுத்துவதற்கான கடல் அடி ஆராய்ச்சிக்கும் இந்த பயன்படும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கரிசனைகளையும் மீறி கப்பல் கொழும்புதுறைமுகத்தில் தரித்து நிற்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவின் புவிஇயற்பியல் ஆய்வுக்கப்பல் இந்திய பெருங்கடலில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது எனினும் சில இந்திய ஊடகங்கள் இந்த கப்பலை இராணுவநோக்கத்துடன் தொடர்புபடுத்துகின்றன என சிங்குவா பல்கலைகழகத்தின் தேசிய மூலோபாய நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.சீனாவின் சர்வதேச கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவே இந்திய ஊடகங்கள் இவ்வாறு செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆராய்ச்சிக்கப்பலை பெரிதுபடுத்துவது இரு நாடுகளிற்கும் இடையிலான அரசியல் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள அவர் இருதரப்பு உறவுகளை சாதகமான விதத்தில் கொண்டு செல்வதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் சியான் ஆறு கப்பலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களிற்கு உட்பட்டவை இலங்கையின் சட்டங்களிற்கு உட்பட்டவை என தென்சீன கடலிற்கான தேசிய நிறுவகத்தின் உலக கடற்படை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் எதிர்ப்புகள் எதிர்பாராமல் திடீரென வெளியானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரத்திற்கு ஏன் அந்த கப்பல் ஆராய்ச்சிக்கு செல்கின்றது என தெரிவித்துள்ள தலைமை விஞ்ஞானி பிராந்திய சர்வதேச காலநிலை மாற்றத்தில் இந்துசமுத்திரம் முக்கிய பங்களிப்பு செய்கின்றது எனினும் இந்து சமுத்திரம் குறித்து போதிய ஆராய்ச்சிகள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு சீன கப்பல் சென்றுள்ளதை இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என சீனகம்யுனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. கடந்த வாரம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத் தில் 2 நாட்கள் நங்கூரமிட இலங்கை அரசு அனுமதி வழங்கியது.
சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிகஅண்மையில் உள்ள இந்தியாவின் ஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல் பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவின் கப்பலான ஷியான்-6 கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது.