உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முகவரி மேதகு பிரபாகரன்.
அன்பு அண்ணனுக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவைதின நல்வாழ்த்துகள்.
வ.கௌதமன்
ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழர் மண்ணை, வீரம் செறிந்த எத்தனையோ மன்னர்கள் ஆண்டதுண்டு.
வீரமும் ஈரமும் அறமும் சுமந்து ஆண்ட ஒரே ஒரு மன்னன் எமது அண்ணன் மேதகு பிரபாகரன் மட்டுமே உண்டு.
சிங்களக் காடையர்கள் ஒரு தமிழ்க் குழந்தையை கொதிக்கும் தாரினில் முக்கியெடுத்து தூக்கிய போது “ஏனப்பா நாம அவர்களை திருப்பி அடிக்கவில்லை” என்று தனது கை பிடித்து நடந்து வந்த தந்தையை கேள்விக் கேட்ட பால சிறுவன்.
தகப்பன் தனது கனவினை வெளிப்படுத்திய போது “படித்துவிட்டு அரசாங்கத்தில் சேர்வதல்ல எனது வேலை; நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கிற எமது மக்களுக்கு தனித்ததொரு அரசாங்கத்தை உருவாக்குவதே எனது தலையாய வேலை” என்று சொன்ன இளம் சிறுவன்.
“எதிரியை விட துரோகியே ஆபத்தானவன்” என சூளுரைத்து தமிழ் மாநாட்டில் தமிழர்கள் சாகக் காரணமாக இருந்த மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை நேருக்கு நேர் நின்று களையெடுத்த பதின்ம பருவ இளைஞன்.
காடையர்களும் ராணுவமும் கண் கொத்திப் பாம்பாக தேடிக் கொண்டிருக்க, பகல் முழுவதும் புறாக்களின் புழுக்கைகளோடும், எலிகளின் எச்சங்களோடும் முருகர் கோவிலின் உச்சியில் மூச்சடக்கி உட்கார்ந்திருந்து, இரவானதும் இறங்கி வந்து இயற்கை உபாதைகள் கழித்து தனது உயிரான தாய் நில விடுதலைக்காக, உயிருக்கு உயிரான நண்பர்களோடு வியூகமைத்துவிட்டு முப்பது நாட்களுக்கு மேல் சிகரத்தில் அமர்ந்து கண்விழித்து தமிழீழற்காக கனவு கண்ட பெருவீரன்.
இனமழிக்கும் எதிரிகளை கருவறுக்க தனது தாய்நில தமிழர்களைக் கொண்டே, உலகின் எந்த ஒரு நாட்டின் துணையுமின்றி காலாட் படை, கப்பல் படை, விமானப் படை என முப்படைகளையும் கட்டி தனித்ததொரு மக்கள் ராணுவத்தை கட்டமைத்த மாவீரன்.
அனைவரும் வியக்க அரசாண்டது பொறுக்காமல் சிங்கள அதிகார வர்க்கத்தோடு இவ்வுலகின் வல்லரசு நாடுகளனைத்தும் ஒன்றிணைந்து எங்கள் பிஞ்சுப் பிள்ளைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரையும் ஈவு இரக்கமின்றி கொத்துக் குண்டுகளையும் ரசாயன குண்டுகளையும் வீசி கொத்துக்கொத்தாக செத்து சிதறி எங்கள் நந்திக்கடல் செங்கடலான போதும் “எதிரியை மட்டும் எதிர்ப்போம்; அவர்கள் வீட்டு பெண்களையும் குழந்தைகளையும் நம் வீட்டார்கள் போல் காப்போம்” என கொழும்பினை தகர்க்க வாய்ப்பிருந்தும் வன்மம் காட்டாது எங்கள் வள்ளுவன் வள்ளலாரை போல் “எதிரிக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்கிற அறக்கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த எம் இனப் பெருந்தலைவன்.
இறுதி யுத்தம் செய்த இரத்த காட்டேரிகள் இராஜபக்சே, கோத்தபய, பசிலை அவர்களது சொந்த மக்களே அடித்து அவர்களின் மாளிகையை தீயிட்டுக் கொளுத்தி அவர்களை ஓட ஓட துரத்திய பின், தங்களின் “பசி”த்தீ அடங்காமல் கொழும்பு தார்ச் சாலையை நிறைத்தபடி நின்று “பிரபாகரன் இருந்திருந்தால் இந்நேரம் நாங்கள் பட்டினி கிடந்திருக்க மாட்டோம்” என ஒரு சிங்கள இளைஞன் பெருங்குரல் எடுத்து கூக்குரல் இட்ட பொழுதே எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறப்பு இதுவரை இந்த உலகில் எந்த தலைவனுக்குமில்லாத தனிப்பெரும் சிறப்பினை அடைந்துவிட்டது.
அப்படிப்பட்ட வீரமும் ஈரமும் அறமும் ஒருங்கே அமைந்த எனது தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எங்களண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு தம்பியாக அவருக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவை தின நல்வாழ்த்துகளை எனது உயிர் நெகிழும் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
“உன்னைப்போல் ஒரு பிறப்பு இனி இவ்வுலகில் சாத்தியமில்லை. ஆனால் உன்னைப் போல் பல வளர்ப்பு தமிழினத்தில் சாத்தியமானது.
நீ இருக்கிறாயா இல்லையா என்கிற மர்மத்தை காலம் கட்டவிழ்க்கட்டும். அதுவரை பொறுமை காக்காமல் இனியாவது தமிழினம் இறுக கைப்பற்றி எம் தலைவனின் வலி சுமந்து புதியதொரு வழி சமைத்து தமிழினத்தை தலை நிமிர்த்துவோம்.
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்.
வெல்வோம்.
பெரு நம்பிக்கையோடு,
வ. கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி “சோழன்குடில்”
26.11.2023