எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது கட்சியின் பிரதான மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டுக்கு சகல தொகுதி அமைப்பாளர்களையும், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் தலா ஒவ்வொருவரையும் அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பர் 23ஆம் திகதி கட்சியின் 7ஆவது மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாடு கட்சிக்கும் பெரும் பலமாக அமைந்தது. அந்த வகையில் உத்தேச தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் இந்த மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 40 – 50 வருட பழமையான கட்சிகள் நாட்டில் காணப்பட்டாலும், அவை இன்று பதாதைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எமது கட்சி 7 ஆண்டுகளுக்குள் முழு நாட்டிலும் வியாபித்துள்ளது.இதனை சீர்குலைப்பதற்கு பலரும் முயற்சித்த போதிலும், அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. எமது ஆதரவாளர்கள் பேர வாவியில் தள்ளி விடப்பட்டனர். அவர்கள் வந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் தாண்டி யதார்த்தத்துடன் நாம் முன்னேறியுள்ளோம். இதே போன்று கட்சி நடவடிக்கைகளையும், மாநாட்டையும் வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்றார்.




















