நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற
இந்திய மத்திய அரசின் அறிவிப்பு
மகிழ்சிக்குரியது!
தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு வழங்கியமையானது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவின் முன்னாள் சிரேஸ்ட ஆளுமைகளின் ஒருவரும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக சனநாயக தளத்திலே தொடர்ந்து பணியாற்றிவருபவருமான சிரஞ்சீவி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீண்டகாலம் சிறையிலே இருந்து விடுதலையான நிலையில் தற்போது தமிழ்நாட்டில் வசித்துவரும் அவரிடம் சர்வதேச பரப்பிலிருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பதில்களை உலகத் தமிழர்களுக்கு முழுமையாகத் தருகின்றோம்.
‘இந்தியாவில் வாழும் இலங்கைத்தமிழர்கள் சட்ட விரோத குடியேறிகள் அல்ல’ என்ற சட்டமாக்கப்பட்ட அறிவிப்பினை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இந்தியாவில் வாழுகின்ற இலங்கைத் தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. அகதிகள் விடயத்தில், 2015 சனவரி 09 திகதிக்கு திகதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளமையை அங்கு அகதியாக வாழும் ஒருவர் என்ற முறையில் உங்கள் கருத்தை பதிவு செய்ய முடியுமா?
இது ஒரு முன்னேற்றகரமான முதல் படி நிலை.
இதனை சட்டமாக்கிய இந்திய தேசத்தின் மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க அரசின் மதிப்பிற்குரிய தலைமைகளுக்கும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் போது, இக்கோரிக்கையினை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்திருந்த தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கும் இந்தியாவில் வாழுகின்ற அனைத்து ஈழத்தமிழர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தியாவில், இலங்கைத்தமிழர்கள் சட்ட உரிமையற்ற வந்தேறிகளாகவே கடந்த காலங்களில் பார்க்கப்பட்டு வந்தனர். அகதிகளாக அங்கீகரிக்கப்படாமையால் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. சட்ட அங்கீகாரம் இல்லாமையால் அயல்நாட்டார் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவதற்கும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைப்பதற்கும் சட்டம் இடமளித்திருந்தது.
1951 இல் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட அகதிகளுக்கான சட்டத்தில் இந்தியா கையொப்பமிடாததும், அதே மன்றில் 1967 இல் அகதிகளுக்காக வகுக்கப்பட்ட நெறி முறைகளில் இந்திய அரசு கையொப்பமிடாததுமே இதற்கான காரணமாக இருந்தது.
இன்றளவும் ஐ.நாவின் அகதிகள் சாசனத்தில் இந்திய அரசு கையொப்பமிடாவிட்டாலும், ஐ.நாவின் மனிதவுரிமைகள் சாசனத்தில் கையொப்பமிட்ட மாண்பின் அடிப்படையில் மத்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வழங்கியிருக்கின்ற இந்த சட்ட அங்கீகாரம், உலகளவில் பாராட்டத்தக்க ஒரு முன்னேற்றமான செயலாகக் கருதப்படுகின்றது.”
இலங்கைத்தீவில் 1983 ஜூலையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி ஆட்டத்தில் பாதிக்கப்பட்டு உயிர் அச்சத்தில் அதிகளவிலான தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தனர். அன்றிலிருந்து இன்றைய நாள் வரை ஏதாவது ஒரு இன முரண்பாட்டின் காரணமாக இந்தியாவுக்கு தமிழர்கள் அகதிகளாக புலம் பெயர்ந்து வருகின்றனர்.
தற்போதைய கணக்கின் படி, முகாம் பதிவுகளில், 108 முகாம்களில் 58,840 பேரும், வெளி அகதிப்பதிவுகளில் 34,134 பேரும் தங்கி உள்ளனர். இக்கணக்கெடுப்பு ஒரு லட்சத்துக்கும் சற்று குறைவான தொகையினை காட்டுகின்றது.
சுமார் 42 ஆண்டுகளான நான்கு தசாப்தங்களை கடந்து மூன்றாவது தலைமுறையும் அகதி என்ற சட்ட அங்கீகாரம் இல்லாமல் வாழ்ந்த எம்மக்களுக்கு இந்த அறிவிப்பு சிறு வெளிச்சமாக உள்ளது.
புலம் பெயர்ந்து அகதிகளாகிய மக்கள் இந்தியாவில், சட்ட மற்றும் உரிமை சார்ந்த சவால்களை சந்தித்த போதெல்லாம், கட்சி பேதமின்றி,அம்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துப் போராடிய நாம் தமிழர், வி.சி.க, பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, த.வா.க போன்ற அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைமைககளுக்கும் எமது உளப்புபூர்வமான நன்றி.
அத்துடன், தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாமல் செயல்படுகின்ற பல இயக்கங்கள், அமைப்புகள்,மாணவர் அமைப்புகள், தனி நபர்கள் என பலர், இந்தியாவில் வசிக்கின்ற இலங்கைத்தமிழர்களின் சட்ட உரிமைகளுக்காக போராடியுள்ளனர் – குரல் கொடுத்துள்ளன. அவ்வமைப்புகள் அனைத்திற்கும் எமது நன்றி. அதே போன்று வழக்கறிஞர்கள் பலர் எமது உரிமைக்காக எமது களங்களில் நின்றுள்ளார்கள். அவர்களின் பங்களிப்பினை மறந்து – கடந்து செல்ல முடியாது. அவர்களுக்கும் எமது நன்றி.
“சட்ட அங்கீகாரம் இல்லாமல் அகதியாக வாழ்வதென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத வலி நிறைந்த ஒன்று. அந்நிலையில் வாழ்ந்தவர்கள் ஒவ்வொரு நாளையும் பயம், அவமானம், தாழ்வு உணர்வு எனக் கடந்து செல்கின்றனர். அடையாளம் இல்லாத வாழ்க்கை என்பது மாபெரும் உளவியல் கொடுமை. அந்த வேதனையை வெளிப்படையாக சொல்வதற்கு வார்த்தைகள் போதாது. அதனை, பிறர் உணர முடியாது. உணரக் கூடியவர்கள், அந்த வலியை நேரில் அனுபவித்தவர்களே.
அதே நேரத்தில், அவர்களின் மனதை அதிகம் வாட்டுவது அடுத்த தலைமுறை பற்றிய கவலைதான். நம்முடைய துயரத்தை ஏற்றுக்கொண்டு வாழலாம் என்றாலும், குழந்தைகள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாதே என்ற பயமும் ஏக்கமும் எப்போதும் துரத்திக் கொண்டே இருக்கும். கல்வி, வேலை, உரிமை, அடையாளம் என வாழ்க்கையின் அடிப்படை உரிமைகள் கூட அவர்கள் கைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளது என்ற அச்சம், “பெற்றோர்களுக்கு எண்ணற்ற இரவுகளை தூக்கமின்றி கழிக்க வைத்துள்ளது.” அகதி வாழ்வின் உண்மையான வேதனை, அடுத்த தலைமுறைக்கான அந்தக் கவலையில்தான் மறைந்து கிடக்கிறது.
இந்த நீண்ட அகதி வாழ்வு, சமூகத்தில் ஆழமான உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உறுதியின்மை, அடையாளமின்மை, நாளைய வாழ்வைப் பற்றிய நிலையான அச்சம் ஆகியவை மனதை சிதைக்கும் காயங்களாகவே மாறியுள்ளன. இதன் விளைவாக, சுய நம்பிக்கை குறைதல், மன அழுத்தம், மற்றும் தன்னம்பிக்கையற்ற தலைமுறை உருவாகும் அபாயமும் உள்ளது.
மேலும், இவ்வளவு அகதிகள் வாழ்ந்தபோதும், கல்வி மற்றும் உரிமை பற்றாக்குறை காரணமாக, அறிவியல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் இளையோர்கள் முன்னேற முடியாமல், இந்த சமூகமே மருத்துவரற்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவர் என்பது ஒரு உதாரணம் மட்டுமே முன்னேற்றகரமான பல துறைகளிலும் இதே வெற்றிடமும் வெறுமையும் காணப்படுகின்றது. இது மிகப் பெரிய எதிர்கால சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு, பல தசாப்தங்களாக உரிமையின்றி தவித்தவர்களின் மனங்களில் இது ஒரு நம்பிக்கையின் ஒளியைக் கொண்டுவருகிறது. அகதிகளின் எதிர்காலத்தையும், அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கையையும் பாதுகாக்கும் விதமாக அரசு எடுத்த இந்த நடைமுறை, வருங்காலத்திற்கு நம்பிக்கையும் உறுதியையும் விதைத்துள்ளது.”
நான் முன்னரே குறிப்பிட்டுள்ளது போன்று, அகதிகள் விடயத்தில் இது முன்னேற்றத்துக்கான முதல் படி. குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமை, அனைத்து துறைகளிலும் உயர் கல்விக்கான அங்கீகாரம், மற்றும் தொழில் வாய்ப்பு அங்கீகாரம், இங்கே கல்வி கற்ற பிள்ளைகள் தங்களது உயர் கல்விக்கு அல்லது தொழில் வாய்ப்புக்காக பிற நாடுகளுக்கு செல்வதற்கான பயண அனுமதி ஆவணங்கள் வழங்குதல், இந்தியாவில் தொழில்கள் செய்வதற்கான சட்ட அங்கீகாரம், மீண்டும் தாயகம் திரும்பியவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புக்கான சுயசார் தொழில் சாலைகள் அமைத்தல் போன்ற எம்மக்கள் நலன் சார்ந்து அடுத்தடுத்த படிகள் நோக்கி நகர வேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பம்.
தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு குடியுரிமை கிடைத்தால் இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்று முன்வைக்கப்படும் கருத்துக் தொடர்பில் உங்களின் பார்வை என்ன?
குடியுரிமை கிடைக்குமா என்ற கேள்விக்கான பதில் நீண்ட விவாதத்துக்குரியது.
இது மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட சீர் திருத்தம் சார்ந்த முடிவு. ஈழ அகதிகள் பிரச்சினை மனிதாபிமானக் கோணத்திலும், தேசிய ஒருமைப்பாட்டின் பார்வையிலும் பார்க்கப்பட வேண்டிய முக்கியமான விடயமாக உள்ளது.
இலங்கை அகதிகளுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவது குறித்து இந்தியாவில் அடிக்கடி மக்கள் மன்றங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த மன்றங்களில், மனிதாபிமானக் கோணத்தில் மட்டுமல்லாமல், அரசியல் சூழ்நிலை, தேசிய பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு போன்ற அம்சங்களையும் மையமாகக் கொண்டே குடியுரிமை தொடர்பான முடிவுகள் அமைய வேண்டுமென விவாதிக்கப்படுகின்றன. அகதிகளின் அடையாளச் சான்றுகள், சட்டவிரோத நுழைவு அபாயம், மேலும் அண்டை நாடுகளில் இருந்து புதிய அகதிகள் வரக்கூடிய சாத்தியம் போன்ற காரணிகள், இந்த விவாதங்களில் முக்கிய பங்காற்றுகின்றன.
எம் மக்களைப்பொறுத்தவரை, மனிதாபிமான அடிப்படையில் இந்த பிரச்சனை அணுகப்பட்டு, நிலையான வாழ்வுக்காக, சுதந்திரமான ஒரு அடித்தளம் தேவை என்பதையே வலியுறுத்துகின்றனர்.
குடியுரிமை வழங்கப்படும் நிலையில், அது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைச் சித்தாந்தங்களுடன் ஒத்து வருவதோடு, அகதிகளின் வாழ்வாதாரம், சமூக முன்னேற்றம், எதிர்கால தலைமுறைகளின் சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் உறுதுணையாக அமையும்.
இலங்கைத் தமிழ் அகதிகள், மூன்று தலைமுறை வாழ்நாளை இந்தியாவில் கழித்துள்ளார்கள். இவர்களுக்கு நிரந்தரமான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசு அணுகுகின்றதாக தெரிகின்றது. இந்நிலை தொடர்ந்தால், இந்தியாவில் தலைமுறையாக வாழ்ந்து வருவோர் (முக்கியமாக இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள்) குடியுரிமை பெறும் வாய்ப்பு படிப்படியாக முன்னேற்றம் பெறும் வாய்ப்புள்ளது.
இந்தியா, ஈழத்தமிழ் அகதிகளுக்கு முழுமையான குடியுரிமை அளித்தால், இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து, அங்குள்ள தமிழர் தேசிய, அரசியல், கலாச்சார உரிமைகள் பாதிக்கப்படும் என்று சிலர் கவலை தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர். அதுவே பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 இலட்சத்துக்கும் சற்றும் குறையாத எண்ணிக்கையில் இந்த புலம் பெயர்வு கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக குறைவானதே. இது, சுமார் ஒரு இலட்சத்தும் சற்று குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, தாயகத்தில் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தும் என்பதனை மறுப்பதற்கில்லை.
குடியுரிமை கிடைத்தாலும், அனைவரும் “ஈழத் தமிழர் என்ற அடையாளத்தை” கைவிட மாட்டார்கள். அவர்கள் இந்தியாவிலிருந்தும் தங்கள் உறவுகளுக்காக, சமூகத்துக்காக குரல் கொடுக்க முடியும்.
ஈழத்தில் “எண்ணிக்கை குறைவு” என்பது கவலைக்குரியது என்றாலும், முழுமையான அரசியல் விடுதலை இருந்தால் மட்டுமே தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.இது எண்ணிக்கைக்கான போராட்டம் அல்ல, உரிமைக்கான போராட்டம் என்று பார்க்க வேண்டும்.
தாயகம் திரும்புவது, நிலம்–வளம்–மொழி–பாரம்பரியத்துடன் இணைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இந்த அடிப்படையில் பார்த்தால், எமது பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படும் என்பது உண்மையே. அதனை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவரவர் முடிவுகளிலேயே உள்ளது.
ஆனால், கடந்த கால அரசியல் அனுபவங்களின் அடிப்படையில் அகதிகள் நாடு திரும்புவதை பெரும்பாலும் விரும்பவில்லை. இன விடுதலையின் அடிப்படையில் தமிழர்களின் பாதுகாப்பு, இன்னும் உறுதியான நிலையை அடையவில்லை என்று உணர்கின்றனர்.
மேலும், ஈழ அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டும் என்ற முடிவினை எடுப்பது, “இலங்கையில் இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லவே இல்லை” என்று சிறீலங்கா அரசு சர்வதேச அளவில், செய்யும் பிரச்சார உத்தியினை வெற்றியளிக்க உதவும் என்ற கோணத்திலும் அணுக வேண்டும்.
தமிழர் தாயகத்தின் யாழ் செம்மணியில் கொத்துக், கொத்தாக மிதக்கும் மனித எலும்புத் தொகுதிகளால் உலகத் தமிழர்கள் உறைந்துபோயுளார்கள் இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இது மாபெரும் மனிதப் பேரவலம். இதுவரையில் 240 மனித எழும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை கண்டும் உலகம் கண் மூடி மௌனித்திருக்கிறது.
“இங்கு புதைந்து கிடக்கும் எலும்புகள் — அவை எலும்புகள் மட்டுமல்ல. அவை ஒருகாலத்தில் வாழ்ந்த கனவுகளின் தடயங்கள், பறிக்கப்பட்ட உயிர்களின் சாட்சிகள், நிறுத்தப்பட்ட சுவாசங்களின் மௌனச் சான்றுகள்.”
“நாங்கள் வாழவேண்டிய இடத்தில் கல்லறையாய் மாற்றிவிட்டார்கள். எங்கள் குரலை மூடினார்கள், ஆனால் எங்கள் சுவடுகளை அழிக்க முடியவில்லை” என்று, புதைக்கப்பட்டவர்கள் பேசுவதை எம்மால் உணர முடிகின்றது.
இந்தக் காட்சி உலகத் தமிழர்களை மட்டுமல்ல, மனிதநேயமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்று. ஏனெனில் இது கடந்து போகக்கூடிய எளிய வரலாறு அல்ல; இது இன்னும் ஆறாத காயம்.
உண்மையில், ஒரு இனமாக வாழ்ந்தவர்களின் எச்சங்கள் இப்படி கொத்துக்கொத்தாக வெளியில் வந்துகொண்டே இருப்பது, எமது இனத்துக்கு நேர்ந்த அநீதியின் சான்றாகவே நிற்கின்றது. யாழ் நிலம், ஒருகாலத்தில் தமிழரின் பண்பாட்டு விழுமியமாய் இருந்தது. இசையின் – மகிழ்ச்சியின் சின்னமாக இருந்த யாழ், இன்று இவ்வாறான துயரத்தின் சாட்சியாய் நிற்கிறது என்பது மிகுந்த வேதனையை தருகிறது.
ஆனால், இதை பார்த்து நம் உள்ளம் உறைந்தாலும், அதே நேரத்தில் இது நம்மை உறுதியானவர்களாக மாற்றி உள்ளது. இந்த எலும்புகள் நமக்கு சொல்லுவது, “நாங்கள் மறக்கப்படக்கூடாது. எங்கள் உயிர் வீணாகவில்லை; உண்மையை வெளிப்படுத்துங்கள், எங்களை நினைவில் கொள்ளுங்கள், எம்மை சாட்சியாக வைத்து நீதியினைப் பெறுங்கள், இனி இது போல் நடக்காதபடி போராடுங்கள்” என்று.
அதனால், இதை நாம் ஒரு துயரமாக மட்டும் கொள்ளாது, நியாயம் தேடும் ஒரு அழைப்பாகப் பார்க்க வேண்டும்.
யாழ் நிலத்தில் எலும்புகள் எழுப்பும் மௌனக் குரல் உலகத் தமிழரின் உள்ளங்களைத் தொடர்ந்து அசைக்க வேண்டும் — அது தான் அந்த உயிர்களுக்கு தமிழர்கள் கொடுக்கும் உரிய இறுதி மரியாதை.
“தமிழர்கள் வாழும் நாடுகளின் அரசுகள் அனைத்தும் இந்த மனித பேரவலத்துக்கான நீதி வேண்டி தங்கள் குரலை உயர்த்த வேண்டும். செம்மணியில் வெளிப்படும் எலும்புகள், தமிழர்களின் வரலாற்றுக்கும் சர்வதேச விசாரணையின் அவசியத்திற்கும் மறுக்க முடியாத சாட்சிகளாக நிற்கின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாட்டு அரசும் அரசியல் கட்சிகளும் தமிழர் உரிமைக்கான உலகளாவிய குரலில் தங்கள் பங்கினை தெளிவாக வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிறது.”
இதனைச் சாத்தியமாக்குவதற்கான அழுத்தத்தை உலகலாவிய ரீதியில் புலம் பெயர் தமிழ் சமூகம் கொடுக்க வேண்டும்.
செம்மணியில் மீட்கப்படும் மனித எலும்புத்தொகுதிகள் இராணுவத்தினருடையது என்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில சிங்கள கடும்போக்காளர்கள் கூறுகிறார்களே?
செம்மணியில் வெளிச்சத்திற்கு வரும் எலும்புத்தொகுதிகளை ‘இது இராணுவத்தினருடையது’ என சில சிங்களத் தலைவர்கள் கூறுவது, முழுமையான ஒரு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகவே பார்க்கமுடிகிறது. இத்தகைய கருத்துக்கள் புதைகுழிக்குள் நீதியையும் மூடிவிடவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பேசும் அரசியல் நாடகமாகும். 1956 முதல் 2009 வரை இடம்பெற்ற இனப்படுகொலைகளை குழிதோண்டிப் புதைத்து மறைக்கும் சதியின் ஆரம்பமாகவே இதைப் பார்க்க வேண்டும்.”
அங்கே கைக்குழந்தைகள் கூட தாயின் மார்போடு கட்டியணைத்தபடி உயிரிழந்துள்ளனர். பாடசாலை குழந்தைகள் புத்தகப் பைகளுடன் கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளனர். ஆண் பெண் என இருவர் ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கள் உறவுகள். அப்பாவி மக்கள். அதனை உறுதி செய்ய அந்த எலும்புகளே இன்று மௌன சாட்சிகள்.
சிறீலங்கா அரச இயந்திரத்தை பாதுகாக்க இராணுவத்தை முன்னிலைப்படுத்தி, அந்தக் குற்றத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு மீது தள்ளிவிடும் தந்திரமான அரசியல் முயற்சி திரைமறைவில் நடக்கிறது. ஆனால், உண்மையில் புதைக்கப்பட்டிருப்பது அப்பாவிகளின் உயிர்கள், எங்கள் குடும்பங்கள், எங்கள் சமூகத்தின் சிதைந்த கனவுகள்.
இது தமிழர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. உலகின் அனைத்து இனங்களின் மனித உரிமைக்கு விடப்பட்டுள்ள சவாலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 18 வயது இளம்பெண் கிருசாந்தி குமாரசாமி தனது பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது இலங்கை இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர், அவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். அவரது தாயார், சகோதரர் மற்றும் அயலவர்கள் இவரைக் கண்டுபிடிக்கச் சென்றபோது அவர்களும் கொல்லப்பட்டனர்.
அந்நேரம், இந்த வழக்கு உலகளவில் பெரும் கவனத்தை பெற்றது. நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கின் போது, கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களில் ஒருவர், யாழ்ப்பாணத்தில் பல நூறு தமிழர்கள் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
இந்த சாட்சியத்தின் அடிப்படையில், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, 1998 இல் செம்மணிப் பகுதியில் அகழாய்வு தொடங்கப்பட்டது.
அப்போது பல எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.தமிழர்கள் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்களின் நேரடி சான்று என்பதை அந்நேரம் மூடி மறைத்தது அரசு.
“அந்தக் காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கில் அகழ்வுப் பணிகளை திட்டமிட்டு நிறுத்தினார். இச்சம்பவம் இடம்பெற்று 28 ஆண்டுகள் கடந்து விட்டது.
மீண்டும் அகழ்வுப் பணிகள் 2025 இல் தொடங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ‘இது இராணுவத்தினரின் எலும்புகள்’ என கூறி உண்மையை மறைக்க முயல்வது, சிங்கள அரசியல் தலைமைகளின் தமிழர் மீதான இனவெறி இன்னும் குறையாததையே வெளிப்படுத்துகிறது.”
சர்வதேசம் கண்களை திறக்க வேண்டும். இது சர்வதேச அளவில் genocide /war crimes / crimes against humanity விசாரணைக்கு உள்ளாக்க வேண்டிய ஒரு முக்கியமான சான்று. சர்வதேச விசாரணையை மேற்கொள்வதிலிருந்து மனித உரிமைகள் பேரவை ஒதுங்கிக்கொள்ளாத வகையில் எமது நீதிக்கான போராட்டம் வலுவடைய வேண்டும்.
செம்மணியின் மண்ணில் புதைக்கப்பட்ட கைகுழந்தைகளின் சுவாசமே இன்று உலக நீதியைக் கேட்கிறது. அதைக் கேட்காமல் உலகம் மௌனமாக இருந்தால், அது உலக வரலாற்றின் மிகப் பெரிய துரோகம் ஆகும்.”
சிறீலங்கா ஜனாதிபதி அனுரவின் கச்சதீவுப் பயணம்
உணர்த்தும் செய்தி என்ன?
சிறீலங்கா ஜனாதிபதி அனுரவின் கச்சதீவு விஜயம், வெறும் தீவுப் பயணம் அல்ல. இது ஒரு திட்டமிட்ட அரசியல் சைகை. “இந்தத் தீவு எங்களுடையது; எப்போதும் ஒப்படைக்க மாட்டோம்” என்ற கடுமையான அறிவிப்பின் மூலம், இந்தியாவின் அழுத்தங்களையும் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளையும் வெளிப்படையாக புறக்கணித்துள்ளார்.
இவ்விஜயத்தின் மறைமுகப் பொருள் இன்னும் ஆபத்தானது. “கடற்படை நடவடிக்கைகள் அரசின் பாதுகாப்பின் ஓர் அங்கமே” என்று அவர் உலகுக்கு அறிவித்தத்தின் மூலம், அடிக்கடி இலங்கைக் கடற்படையால் உயிரிழக்கும் தமிழ்நாட்டு மீனவர்களின் துயரங்கள் எந்த விசாரணையையும் தண்டனையையும் சந்திக்காது என்பதே அனுரவின் வலுவான செய்தி.
இலங்கை, சீனாவின் ஆதரவை நம்பி நிற்கும் இன்றைய சூழலில், அனுரவின் கச்சதீவு விஜயம் இந்தியாவுக்கு நேரடியாக விடப்பட்ட தூதரக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது; ‘தமிழ்நாட்டின் கோஷங்களுக்கு சிறீலங்கா அடிபணியாது, சீனாவின் ஆதரவோடு தன்னம்பிக்கையுடன் நிற்போம்’ என்ற தைரியமான கூற்றையும் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.”
ஆனால் உண்மையில், கச்சதீவு சிக்கல் உரிமை சார்ந்தது மட்டுமானதல்ல. அது இரு நாடுகளின் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரச் சிக்கல் சார்ந்ததாகும். இதற்கான தீர்வு, கச்சதீவு – கடல் எல்லை அரசியலில் அல்ல; இருநாடுகளும் இணைந்து உருவாக்க வேண்டிய நீடித்த, நம்பகமான ஒப்பந்தங்களில் தான் உள்ளது.
இவற்றைப் புறக்கணித்து, அரசியல் ‘ஹீரோயிசம்’ காட்டிய பயணமாகவே அனுரவின் இந்த விஜயம் இலங்கை வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்றே நான் பார்க்கின்றேன்.