ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இணைந்த நாஞ்சில் சம்பத் மேடையிலோ, விஜய்யின் பேச்சிலோ இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயமங்கலம் பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை, விஜயமங்கலம் பகுதியில் உள்ள சரளையில் தவெக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெகு சிறப்பாகச் செய்திருந்தார். இதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த தவெக தலைவர் விஜய், அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டத் திடலுக்கு வருகை தந்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் புடைசூழ அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேடையில் முக்கியப் புள்ளிகள் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “பெரியார் பிறந்த மண்ணிற்கு விஜய் வருகை தந்துள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் வருமானத்தை உதறிவிட்டு, மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு புரட்சித் தளபதி விஜய்யைத்தான் வரலாறு படைக்கப்போகும் தலைவராகப் பார்க்கிறேன்” என்று புகழாரம் சூட்டினார். இவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் மேடையில் உரையாற்றினர்.
நாஞ்சில் சம்பத் எங்கே? மேடையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அமர்ந்திருந்த நிலையில், சமீபத்தில் தவெகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இணைந்த நாஞ்சில் சம்பத் எங்கும் தென்படவில்லை. விஜய் பேசுவதற்கு முன்பாக அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த் பேசி முடித்ததும் விஜய்யின் உரை தொடங்கியது.
தனது உரையின் இறுதியில் பேசிய விஜய், “செங்கோட்டையன் அண்ணன் தவெகவுக்கு வந்தது மகிழ்ச்சியான விஷயம். அவரைப் போன்று இன்னும் நிறையப் பேர் வருவார்கள்” என்று செங்கோட்டையனை மட்டும் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால், நாஞ்சில் சம்பத் பெயரை விஜய் ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் புறக்கணிப்பா? திமுகவில் தனக்கு உரிய மரியாதை இல்லை என்றும், அறிவாலயத்தினர் தன்னை வசைபாடியதாகவும், சைக்கிள் கூட வாங்கித் தரவில்லை என்றும் குற்றம்சாட்டியே நாஞ்சில் சம்பத் அங்கிருந்து விலகினார். “விஜய் எனது ரசிகர் என்று கூறியதைக் கேட்டுப் பூரித்துப் போனேன்; இதைவிட வேறு என்ன வேண்டும்?” என்று நெகிழ்ந்து தவெகவில் இணைந்தார்.
திமுகவில் மரியாதை இல்லை என்று கூறி தவெகவில் இணைந்த அவருக்கு, ஈரோடு மாநாட்டில் அழைப்பு கூட விடுக்கப்படவில்லையா அல்லது அழைத்தும் புறக்கணிக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. செங்கோட்டையன் இணைந்தபோது அவரைப் பற்றிப் பெருமையாக வீடியோ வெளியிட்ட விஜய், நாஞ்சில் சம்பத் இணைந்தபோது அத்தகைய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை.
தற்போது பொதுக்கூட்ட மேடையிலும், விஜய்யின் பேச்சிலும் நாஞ்சில் சம்பத் புறக்கணிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. “நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




















