இப்போது ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படம் அவரை ரொம்ப சுவாரஸ்யமாக்கியது.
பத்து நாள்கள் தொடர்ந்து வேலை வேலை என்று ஓடியதால் தாடியும் மீசையும் தாறுமாறாக வளர்ந்திருந்தன. சலூன் கடைக்குப் போக நேரமே கிடைக்கவில்லை. நாளைக்குப் போகலாம் நாளைக்குப் போகலாம் என்று ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டே போனது. சரி இன்றைக்கு எவ்வளவு நேரமானாலும் பரவால்லை போய் ஷேவ் பண்ணிட்டு வந்துரலாம் என்று கிளம்பினேன். பெங்களூருக்கு வந்து 5 வருடங்கள் ஆன பிறகு இவ்வாறு நிகழ்வது இதுதான் முதல் தடவை.
கடையில் கூட்டம் கம்மியாகவே இருந்தது. எனது பக்கத்தில் ஒரே ஒருவர் மட்டும் உட்கார்ந்திருந்தார். டிவி ஓடிக்கொண்டிருந்தது. ராஜ்குமார் பாடல் “நீனெல்லோ நான் அல்லே ஈ ஜீவா நின்னல்ல” ஒலித்துக்கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. சரிதாவும், ராஜ்குமாரும் இயல்பாக நடித்திருப்பார்கள். பாடலின் பாதியிலேயே சேனலை மாற்றினார். கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது அடுத்து சேது கன்னட ரீமேக் படத்தின் பாடல் “உசிரே உசிரே ஈ உசிரைக் கொல்ல பேடா” இந்தப் பாடலின் பாதியிலேயே வேறுபாட்டை மாற்றினார். ஒரு பாட்டையும் முழுதாக வைக்கவேயில்லை.
இப்போது ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படம் அவரை ரொம்ப சுவாரஸ்யமாக்கியது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். அதுவும் சண்டைக்காட்சிகள் வரும் போது “எரடு நிமிஷா சார், ஈ ஃபைட் சூப்பராகியிரத்தே” என்று அவருக்கு முடிவெட்டுவதை விட்டுவிட்டு டிவி பார்ப்பதில் மும்முரமானார். அடுத்து ஒரு 5 நிமிடம் முடி வெட்டினார். பின்னர், “சூப்பர் சீன் சார் இது” என்று மறுபடியும் டிவி பார்க்கத் தொடங்கினார். அவர் பொறுமையின் சிகாமணியாக இருக்க வேண்டும். வேறு யாராயிருந்தாலும் வெளியே போயிருப்பார்கள். ஆனால், அவர் எதுவுமே சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
நான் வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். ஜனநடமாட்டம் கம்மியாகவே இருந்தது. ஒரே ஒரு சிறுமி மட்டும் ஸ்கூல் யூனிஃபார்மில் நடந்துவந்து கொண்டிருந்தாள். அவளது பின்னாலேயே கொஞ்ச தூரத்தில் அவளது அம்மா அவளைப் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தார். கிளைமேட் வேறு மாறிக்கொண்டே இருந்தது. மழை இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் என்று தோன்றியது. அவன் முடியை வெட்டுவதைவிடவும் டிவி பார்ப்பதிலேயே லயித்திருந்தார். கொஞ்ச நேரம் முடி வெட்ட, கொஞ்ச நேரம் டிவி பார்க்க, கொஞ்ச நேரம் பான் பராக் எச்சியை வெளியே போய்த்துப்ப என்றிருந்தார்.
ஒரு வழியாக அவர் சேரை விட்டு இறங்கினார். அடுத்தவர் தயாராக இருந்தார். இவருக்கு அவர் முடிவெட்டி முடிக்க குறைந்தது 2 மணிநேரமாவது ஆகும் என்று தோன்றியது. கடையில் இருந்த அந்த இளைஞர் முடிவெட்டத் தொடங்கும் முன்பே போன் -ஐ எடுத்துக்கொண்டு ஓடினார். 5 நிமிடம் கழித்துதான் வந்தார். டிவி- யில் ஒரு கண் அவரது தலையில் ஒரு கண் என்று இருந்தார். இவர் வயதானவராக இருந்ததால் அவரது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு முடியை வெட்டிக்கொண்டிருந்தார். முதலில் கட்டிங் மட்டும்தான் என்று சொன்னவர் அடுத்தடுத்து ஷேவிங், ஹேர் டை என்று இழுத்துக்கொண்டே போனதால் நேரம் அதிகமாக ஆனது. வேற கடைக்குப் போயிரலாமா என்று சிந்தித்தேன். “சார், எரடு நிமிஷா சார்” என்றா.
நான் கன்னடத்தில் சொன்னேன். “இல்லி பந்து ஒன்அவர் மேல் ஆய்த்து, ஆபீஸ்கே பேக ஓகு பேக்கு” என்றேன்.
“வெயிட் மாடி சார்” என்றார்.
அவர் கேட்டுக்கொண்டதால் பெஞ்ச்சில் உட்கார்ந்தேன். அவர் வேலை முடிந்தது. அவர் மறுபடியும் ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினார். யாரிடமோ சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்கார்ந்து கொண்டு அவரது வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வேகமாய் வந்தார், “சாரி சார், கேர்ல் ப்ரெண்ட்” என்றார்.
“பேக ஷூரு மாடி” என்றேன். அவன் ஷேவிங் பண்ணத் தொடங்கினார்.
இப்போதும் டிவி-யில்தான் அவனது கண்கள் பதிந்திருந்தன. வேலை செய்து கொண்டிருந்தவர் திடீரென, “சார், ஈ சீன் சக்கத்தாகி இரத்தே” என்றார். இந்தத் கடைப்பக்கம் இனிமே எட்டியே பார்க்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இப்படி என்று இழுத்து இழுத்து ஒருவழியாக முடித்தார். அந்த கடைக்கு நான் போன போது மணி 10:20, வெளியே வந்தபோது மணி 11:50. இவர் கடைக்குப் பெரிய கும்பிடு என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தேன்.
அடுத்த மூன்று மாதங்கள் அந்த கடைப்பக்கமே போகவில்லை. ஆனால், அவரை எங்கள் தெருவில் பல நாள்கள் பார்த்தேன். வண்டியில் சூப்பர் ஹீரோ போல பறந்து கொண்டிருப்பார். சுவாரஸ்யமான இளைஞர்.
ஒரு நாள் ஒரு தமிழ்க்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். அதே இளைஞர் பைக்கில் பறந்து கொண்டிருந்தார், பக்கத்திலிருந்தவர் சொன்னார் “பெரிய ஹீரோன்னு நெனப்பு, தலைக்கு மேல கடனை வெச்சுக்கிட்டு” என்றார். அதுதான் அவரைப் பார்த்த கடைசிநாள். அதன்பின் அவரைப் பார்க்கவில்லை.
மூன்று மாதம் கழித்து அவர் கடைப்பக்கம் போக நேர்ந்தது. புதியதாக வேறு ஒரு இளைஞர் நின்றுகொண்டிருந்தார். சரி இனிமேல் இந்தக் கடைக்கு வந்து முடி வெட்டலாம் என்று நினைத்துக் கொண்டு அடுத்த நாளே அந்தக் கடைக்குப் போனேன். எனக்கு முன்னால் ஒருவர் மட்டுமே உட்கார்ந்து கொண்டிருந்தார்.
டிவி-யில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது. முடிவெட்டிக்கொண்டிருந்தவரிடம் அதே இளைஞரின் குரல், “சார், எரடு நிமிஷா ஈ சீன் சூப்பராகி இரத்தே” என்றார்.
நான் எதுவுமே சொல்லாமல் கடையை விட்டு வெளியே வந்தேன்.
நன்றி-அருண்குமார் செல்லப்பன்