நீங்களும் பயன் பெறுங்கள்: உங்கள் துன்பத்தில்இருந்துவிடுபட இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்வதால் துன்பம் விலகும் என்றும் திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது அடைக்கலம் என்பது, அடைக்கலமாக ஒப்புவித்துத் தமக்கெனச் செயலின்றியிருத்தல். அவ்வாறு இறைவனிடம் தம்மை ஒப்புவித்துப் பாடிய பத்துப் பாடல்கள் ஆகும். வாசனாமலம் உள்ளவரை துன்பம் இருந்துகொண்டேயிருக்கும். திருவருளைப் பெற இயலாது. இதனை உணர்ந்து இறைவனிடம் அடைக்கலமாக ஒப்புவித்துத் தம்மைப் பக்குவப்படுத்திககொள்ளுதல் பக்குவ நிண்ணயம்.இறைவனிடத்தில்அடைக்கலம்வேண்டிபாடப்பட்டதுஅடைக்கலப்பத்து திருவாசகம்
1ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
திருச்சிற்றம்பலம்
செழுக்கமலத்திரளன நின்சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.
பொருள் : உடையாய் – உடையவனே, செழு – வளமையான, கமலத் திரள் ஆன தாமரை மலர்த்தொகுதி போன்ற, நின் சேவடி சேர்ந்து – உனது திருவடியை அடைந்து,அமைந்த அமைதி பெற்ற, பழுத்த மனத்து அடியர் – கனிந்த மனத்தையுடைய அடியார்கள், உடன் போயினர் – உன்னோடு கலந்துவிட்டனர், யான் பாவியேன் – நான் பாவத்தையுடையேனாயினேன் – புழுக்கண் உடை – புழுக்கள் தமக்கு இடமாக உடைய, புன் குரம்பை – இழிவான இவ்வுடம்பில் கிடக்கின்ற, கல்வி ஞானம் இல்லா – கல்வியும் அறிவும் இல்லாத, பொல்லா அழுக்கு மனத்து அடியேன் – பொல்லாத மாசுகளையுடைய மனத்தையுடைய யான், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலம்.
விளக்கம் : இறைவனுடைய திருவடியைப் பற்றினவர்களுள், பழுத்த மனத்து அடியவர்கள் அவனுடன் சென்றார்கள் என்றும், பாவமுடைமையால் யான் அவ்வாறு செல்லாமல் புன்குரம்பையில் தங்கினேன் என்றுங்கூறினார். உடம்பின் இழிவு கருதி, ‘புழுக்கணுடைப் புன்குரம்பை’ என்றார். கண் – இடம். இதனையே,
பொல்லாப் புழுமலி நோய்ப் புன் குரம்பை’ என்றார் பிறரும். அழுக்கு மனமாவது, பக்குவம் பெறாத மனமாம். பக்குவம் பெறுவதற்கு அடைக்கலமே வழி என்க. தம்மை அடைக்கலப் பொருளாகக் கூறியதற்கேற்ப, இறைவனை அதனை உடையவன் என்பார், ‘உடையாய்’ என்றார்.இதனால், வாசனாமல நீக்கத்துக்கு இறைவனிடம் அடைக்கலம் புகுவதே வழி என்பதாகும்..
2ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
வெறுப்பனவே செய்யுமென் சிறுமையை நின் பெருமையினாற்
பொறுப்பவனே அராப்பூண்பவனே பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே நின் திருவருளாலென் பிறவியை வேர்
அறுப்பவனே உடையாய் அடியேனுன் அடைக்கலமே.
பொருள் : உடையாய் – உடையவனே, வெறுப்பனவே செய்யும் – வெறுக்கத் தக்கனவாகிய தீமைகளையே செய்கின்ற, என் சிறுமையை – எனது இழிவுத்தன்மையை, நின் பெருமையினால் – உன்னுடைய பெருந்தன்மையினால், பொறுப்பவனே – பொறுத்துக் கொள்பவனே, அராப் பூண்பவனே – பாம்பையணிவோனே, பொங்கு – பெருகுகின்ற, கங்கை – கங்கையை, சடை – சடையின்கண், செறுப்பவனே – அடக்குவோனே, நின் திருவருளால் – உனது திருவருளால், என் பிறவியை – என்னுடைய பிறவியை, வேர் அறுப்பவனே – வேரோடுங் களைவோனே, அடியேன் – அடியேனாகிய யான், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலம்.
விளக்கம்: பாம்பின் பிழையைப் பொறுத்து ஏற்றுக்கொண்டது போல, என் பிழையைப் பொறுத்து ஏற்றுக்கொண்டாய் என்றும், கங்கையின் ஆற்றலையடக்கி உலகினை அழிவினின்றும் காத்தது போல, வினையின் ஆற்றலையடக்கி என்னைத் துன்பத்தினின்றும் காத்தாய். என்னைத் தன் உடைமையெனக் கொண்டவனே! உனதடிமை, உன்னிடத்தில் அடைக்கலமானேன்!
3ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
பெரும்பெருமான் என் பிறவியை வேரறுத்துப்பெரும் பிச்சுத்தரும் பெருமான் சதுரப்பெருமான்என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற
அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
பொருள் : உடையாய் – உடையவனே, பெரும்பெருமான் – தேவதேவனே, என் பிறவியை – என் பிறப்பை, வேர் அறுத்து – வேரோடு களைந்து, பெரும்பிச்சு – உன்மீது மிகுந்த பேரன்பினை, தரும் பெருமான் – எனக்கு அருளும் தேவனே, சதுரப் பெருமான் –
திறமை மிக்க பெருமானே, என் மனத்தினுள்ளே – என்னுடைய மனத்தின்கண்ணே, வரும் பெருமான் – தோன்றுகின்ற பெருமானே, மலரோன் நெடுமால் – பிரமனும் திருமாலும், அறியாமல் நின்ற – காணாமல் திகைத்து நின்ற, அரும்பெருமான் – அரிய பெருமானே, அடியேன் – அடியேனாகிய யான், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலமே
விளக்கம் : பெரும்பித்தைத் தருதலாவது, அவனையே நினைந்திருக்கச் செய்தல். சதுரப்பாடாவது, மல வாதனையையொழித்துப் பிறவியைக் களைதலாம். ‘தம்மை மறந்து தனை நினைப்பவர் செம்மை மனத்துள்ளே’ தோன்றுவானாதலின், ‘மனத்தினுள்ளே வரும் பெருமான்’ என்றார்.
4ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில் நின் கழற்புணை கொண்டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல் வாய்ச்சுழியென்று மாதர் திரைபொரக் காமச்சுறவெறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
பொருள் : உடையாய் – உடையவனே, புயல் பொழிகின்ற – வினையாகிய மேகம் பொழிகின்ற, துன்ப வெள்ளத்தில் – துன்பமாகிய வெள்ளத்தில், இழிகின்ற அன்பர்கள் – இழிந்து செல்லுகின்ற அடியார்கள், நின் கழல் – உன் திருவடியாகிய, புணை கொண்டு – தெப்பத்தைப் பற்றிக்கொண்டு, வான் ஏறினர் – சிவலோகமாகிய கரையை ஏறினார்கள், யான் – அடியேன், இடர்க் கடல்வாய் – துன்பமாகிய கடலில், சுழி சென்று – சுழலில் அகப்பட்டு, மாதர் திரை பொர – பெண்களாகிய அலைகள் மோத, காமச் சுறவு எறிய – ஆசையாகிய சுறாமீன் கதுவ, அழிகின்றனன் – வேதனைப்படுகின்றேன், அடியேன் – யான், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலம்.
விளக்கம் : துன்ப வெள்ளம் என்றது, பிறவிப் பொருங்கடலை. வெள்ளம் என்றது பிறவியை. ஆதலால், புயல் என்றது வினையாயிற்று. மழைக்குக் காரணம் மேகம் என்றாற்போலப் பிறவிக்குக் காரணம் வினை என்பதாம். மாதர் அலைத்தலைச் செய்வராதலின், மாதரைத் திரையாகக் கூறினார். சுறவின் வாய்ப்பட்டோர் உய்ய முடியாதது போல, காமத்தின் வசப்பட்டோரும் உய்ய முடியாதாதலின், ‘காமச் சுறவெறிய’ என்றார்.
இதனால், இறைவன் பிறவிக் கடலுக்குத் தோணியாய் இருக்கிறான் என்பது கூறப்பட்டது.
5ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறமறந்திங்கிருள் புரியாக்கையிலே கிடந்தெய்த்தனன் மைத்தடங்கண் வெருள்புரிமான் அன்ன நோக்கி தன்பங்க விண்ணோர்பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
பொருள் : மை – அஞ்சனம் எழுதிய, தடம் – விசாலமான, கண் – கண்களையும், வெருள் புரி மான் அன்ன – வெருளுகின்ற மானினது நோக்கம் போன்ற, நோக்கி தன் – நோக்கத்தையுடைய உமையம்மையின், பங்க – பாகத்தையுடையவனே, விண்ணோர் பெருமான் – தேவர் பெருமானே, உடையாய் – உடையவனே, சுருள் புரி கூழையர் – சுருளாகக் கட்டப்பட்ட கூந்தலையுடைய மாதரது, சூழலில் பட்டு – சூழ்ச்சியில் அகப்பட்டு, உன் திறம் மறந்து – உன்னுடைய கருணைத்திறத்தை மறந்து, இங்கு – இவ்விடத்து, இருள் புரி – அறியாமையை விளைவிக்கின்ற, யாக்கையிலே கிடந்து – உடலிலே தங்கி, எய்த்தனன் – இளைத்தேன், அடியேன் – யான், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலம், அருள் புரியாய் – திருவருள் புரிவாயாக.
விளக்கம் : உடலைப் பெற்றது உன் கருணையை நினைந்து உருகுவதற்காக; ஆனால், “வந்த வேலையை விட்டுப் பந்தற்காலைப் பிடித்தது போல” மாதர் மையலில் பட்டு வருந்துகின்றேன என்பார், ‘இருள் புரி யாக்கையிலே கிடந்தெய்த்தனன்’ என்றார். கருணையைப் பெறத் துணை செய்யாது, துன்பினைப் பெறத் துணை செய்தலால் உடலை, ‘இருள்புரி யாக்கை’ என்றார்.
இதனால், இறைவன் கருணையே மையலை நீக்க வல்லது என்பது கூறப்பட்டது.
6ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போது வந்தெந்தாள் வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
பொருள் : ஆழி அப்பா – கருணைக்கடலாகிய அப்பனே, உடையாய் – உடையவனே, மாழை – மாவடுவின் பிளவையொத்த, மை பாவிய – அஞ்சனம் தீட்டப்பெற்ற, கண்ணியர் – கண்களையுடைய மாதராகிய, வல் மத்து இட – வலிய மத்தை இடுதலால், உடைந்து – சிதறி, தாழியைப் பாவு – பானையில் பரவிய, தயிர் போல் – தயிரைப் போல, தளர்ந்தேன் – மனம் உடைந்து தளர்ச்சியடைந்தேன், தடமலர்த்தாள் – பெருமை பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை, வல்வினையேன் – வலிய வினையையுடைய யான், எப்போது வந்து – எப்பொழுது வந்து, எந்நாள் வணங்குவேன் – எக்காலத்து வணங்குவேன், அடியேன் – யான், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலம்.
விளக்கம் : மாழை என்பது மாமரம்; அது இங்குக் கண்ணுக்கு உவமையாகக் கூறப்பட்டமையால், அதன் வடுவுக்காயிற்று; முதலாகுபெயர், ‘தயிர் போல்’ என்றது குழம்புதலுக்கு உவமை. தொழில் உவமம். மத்தால் கடையப்பட்ட தயிர் சிதறுவது போல, மாதரால் அலைக்கப்பட்ட மனம் சிதறும் என்பதாம்.
இதனால், திருவடி ஞானம் பெற விழைவு வேண்டும் என்பது கூறப்பட்டது.
7ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்6
மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டு
புன்கணனாய்ப் புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி
என்கணிலே யமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கணனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே.
பொருள் : உடையாய் – உடையவனே, மின் கணினார் – ஒளிர்கின்ற கண்களை உடையவரும், நுடங்கும் இடையார் – துவளுகின்ற இடையையுடையவரும் ஆகிய மாதரது, வெகுளி வலையில் அகப்பட்டு – புலவியாகிய வலையில் அகப்பட்டு, புன்கணன் ஆய் – துன்பத்தையுடையவனாய், புரள்வேனை – உழலுகின்ற என்னை, புரளாமல் – அவ்வாறு உழலாவண்ணம், புகுந்தருளி – வலிய வந்து ஆட்கொண்டருளி, என்கணிலே – என்னுடைய கண்ணிலே, அமுது ஊறி – அமுதம் சுரந்தது போன்று, தித்தித்து – இனித்து, என் பிழைக்கு இரங்கும் – என் குற்றங்களைப் பொறுத்து இரங்குகின்ற, அங்கணனே – அருளுடையவனே, அடியேன் – யான், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலம்.
விளக்கம் : புலவி, சிறு கோபம். இது காம இன்பத்துக்கு இன்றியமையாதது. ‘உப்பமைந்தற்றால் புலவி’ என்றார் நாயனாரும். உணவுக்கு உப்பு இன்றியமையாதவாறு போலக் காம இன்பத்துக்குப் புலவி இன்றியமையாதது. புலவியே இங்கு வெகுளி எனப்பட்டது. குருவாகி வந்து ஆட்கொண்ட திருக்கோலத்தை அடிகள் எஞ்ஞான்றும் மறவாது கண்டு இன்புற்றிருந்ததையே இங்கு, ‘என்கணிலே அமுதூறித் தித்தித்து’ என்றார். ‘கண்ணா ரமுதக் கடலே போற்றி’ என்றும், ‘கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடி’ என்றும் முன் கூறியுள்ளவற்றையும் நினைக்க. துன்பத்தினின்றும் எடுத்து இன்பத்தை அருளினமையால், ‘அங்கணனே’ என்றார்.
இதனால், இறைவன் திருக்காட்சி இன்பம் தருவது என்பது கூறப்பட்டது.
8ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே
கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன்
பாவிடை யாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
பொருள் : உடையாய் – உடையவனே, மாவடு வகிர் அன்ன – மாவடுவின் பிளவு போன்ற, கண்ணி – கண்களையுடைய உமா தேவியின், பங்கா – பாகத்தையுடையனே, நின் – உன்னுடைய, மலர் அடிக்கே – மலர் போலும் திருவடிக்கே, கூவிடுவாய் – என்னை அழைத்துக்கொள்வாய், கும்பிக்கே இடுவாய் – அல்லது என்னை நரகத்திலே தள்ளுவாய், நின் குறிப்பு அறியேன் – இவைகளில் உன் திருவுள்ளக் குறிப்பு இன்னது என்பதை யான் அறிந்திலேன் : அதனால், உள்ளம் – என் மனம், பா இடை ஆடு – நூற்பாவினூடே ஓடுகின்ற, குழல் போல் – குழல் போல, கரந்து – துன்பத்துள் மூழ்கி, பரந்தது – உழல்கின்றது, ஆ கெடுவேன் – ஐயோ கெடுவேன், அடியேன் – யான், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலம்.
விளக்கம் : பா என்பது, ஆடை நெய்வதற்கு நீளத்தில் அமைக்கும் நுல். குழல் என்பது நூலைக் குறுக்காகச் செலுத்தும் கருவி. இது வலமும் இடமும் உழன்றுகொண்டே இருக்கும். இறைவன் சுதந்தரம் உடையவன் ஆகலின், என்னைத் தனது திருவடியில் சேர்த்துக்கொள்வானோ அல்லது நரகத்தில் தள்ளிவிடுவானோ, அதை என்னால் அறிய முடியவில்லை என்பார், ‘நின் மலரடிக்கே கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய்’ என்றார். ஆகவே, இதனை அறிய முடியாமையால் உண்டாகிய மன வருத்தத்தையே, ‘பாவிடை ஆடு குழல்போல் கரந்து பரந்தது உள்ளம்’ என்றார் என்க.
இதனால், இறைவனது திருக்குறிப்பை உணர முடியாது என்பது கூறப்பட்டது.
9ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
பிறிவறியா அன்பர் நின்னருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறியாச் செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பதோர்
நெறியறியேன் நின்னையேயறியேன் நின்னையேயறியும்
அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
பொருள் : உடையாய் – உடையவனே, பிறிவு அறியா அன்பர் – உன்னை விட்டு நீங்குதல் அறியாத அடியார்கள், நின் – உனது, அருள் – அருளையுடைய, பெய்கழல் – இடப்படும் வீரக்கழலையணிந்த, தாள் இணைக்கீழ் – திருவடியிணையின் கீழே, வந்து – வந்து, மறிவு அறியா – மீண்டும் பிறவிக்குத் திரும்புதலை அறியாத, செல்வம் பெற்றார் – வீட்டுச் செல்வத்தினைப் பெற்றார்கள்; அடியேன் – யானோ, உன்னை வந்திப்பது – உன்னை வணங்குதலாகிய, ஓர் – ஒரு, நெறி அறியேன் – நல்ல வழியை அறியமாட்டேன், நின்னையே அறியேன் – உன்னையும் அறிய மாட்டேன், நின்னையே அறியும் – உன்னையே அறிகின்ற, அறிவு அறியேன் – ஞானத்தையும் உணர மாட்டேன், உன் அடைக்கலம் – உனக்கு அடைக்கலம்.
விளக்கம் : பிரிவு என்பது பிறிவு என எதுகை நோக்கித் திரிந்தது. வந்திப்பதோர் நெறியாவது, இறைவனை வணங்குவதற்குரிய வேதாகம நெறியாம். இறைவனை அறிதலாவது, அவனது உண்மை நிலையையறிதலாம். ‘நின்னையே அறியும் அறிவு’ என்பது சிவஞானம். சிவஞானத்தினால்தான் இறைவனை உணர முடியும் என்பதாம்.
இதனால், இறைவனைக் சிவஞானத்தினால்தான் உணர முடியும் என்பது கூறப்பட்டது.
10ம் பாடல் – அடைக்கலப்பத்து – திருவாசகம்
வழங்குகின் றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை யேன்என் விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
பொருள்: உடையாய் – உடையவனே, வழங்குகின்றாய்க்கு – வழங்குகின்ற உன்னிடத்தில், உன் அருள் – உன் திருவருளாகிய, ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு – அரிய அமுதத்தை அள்ளிக்கொண்டு, விழுங்குகின்றேன் – விழுங்குகின்றவனாகிய, வினையேன் – தீவினையுடையேனாகிய யான், என் விதியின்மையால் – எனது நல்லூழின்மையால், விக்கினேன் – தொண்டையில் விக்கிக்கொள்ளப்பட்டேன், தழங்கு – ஒலிக்கின்ற, அரு – அருமையாகிய, தேன் அன்ன – தேனை யொத்த, தண்ணீர் – குளிர்ந்த நீரை, பருகத்தந்து – யான் பருகக் கொடுத்து, உய்யக் கொள்ளாய் – என்னை உய்யக் கொள்வாயாக, அடியேன் – யான், அழுங்குகின்றேன் – வருந்துகின்றேன், உன் அடைக்கலம் – உனக்குள் அடைக்கலம்.
விளக்கம் : வழங்குகின்றாய்க்கு திருவருளைப் பெற்றும் அடியாருடன் செல்லாது உலகத்தில் நின்றதை. தண்ணீர் தருதலாவது, மீளக் காட்சி வழங்குதல். அழுங்குதலாவது, காண வேண்டுமென்று வருந்துதல். இதனால் இறையனுபவத்தைப் பெறுவதற்குப் பக்குவம் வேண்டும் என்பதாகும்.
தழங்கரும் தேனன்ன தண்ணீர் – வான்மழை பொழிவது போல் எல்லார்க்கும் பொதுவாய், நதிபோல் சலசலவென ஓடி அனைவரின் தாகத்தையும் தணித்து, உணவாகவும் மருந்தாகவும் விரும்பி அருந்தும் இனிமையோடும் இருக்கும் தேன்போல, வீடுபேறை நல்கும் அமுதாகவும் அந்த அமுதை விழுங்கத் தடையாக விளங்கும் தீவினையெனும் விக்கலை நீக்கும் மருந்தாகவும் மருந்தென்றாலும் கசக்காமல், அருந்த அருந்தத் திகட்டாத இனிப்பாகவும் விளங்கும் தண்ணீராய் அருள் விளங்குதலால், அதைத் தேனன்ன தண்ணீர் எம்மை உடைமையாய்க் கொண்ட தலைவனே! இவ்வடிமை, உன்னிடத்தில் அடைக்கலமானேன்.
“அவனருளால் அவன்தாள் வணங்கி” எனும் சிவபுராண வரிகளை ஒப்பு நோக்குக. அவன் தாள் வணங்குதல் என்பது அருளமுதம். தாள் பணிதலால் பேரின்பம் கிட்டும். ஆனால், தாள்பணியத் தடையாய் தீவினையாலுற்ற நம் ஆணவமே விளங்குகிறதே?! அந்த ஆணவம் தளர்வுற்று அவனடி பணிவதற்கும் மாயையால் அனுபவம் தந்து பற்றறச் செய்து மடைமாற்றும் அவனருளாகிய தண்ணீர் தேவைப்படுகிறது. அன்றி, அத்தனை எளிதில் ஆணவம் இறைவனின் திருவடி நோக்கித் திரும்புவதில்லை.
சலசலவென ஓடுகின்ற தன்ணீரைப் பருகுவதால் விக்கல் தீரும். நீ வழங்கும் அமுதாகிய அருளே இங்கு என் தீவினையால் உற்ற அடைப்பை மாய்க்க நான் பருகவேண்டிய தண்ணீராயும் அமைவதென்ன விந்தை?! பேரின்ப வீடருளும் அருளமுதாம் நின் திருவடியை வணங்கும் பேற்றினைத் தந்த நீயே, உனை உளமுருகி வணங்கச் செய்யும் அருளாகிய தண்ணீரையும் பருகத் தந்து, எனது ஆணவம் புறத்தே விரிவதைத் தடுத்து, உனது திருவடியை அது சேர்ந்து உய்யுமாறு அருள்புரிவீராக!
பேரின்ப வீடுபேறாம் மோனநிலையை நல்குகின்ற அருளாகிய அமுதத்தைப் பாகுபாடின்றி வாரி வழங்குகின்ற என் தலைவா!
அமுதின் அருமை புரிபட, வாரி வாரி விழுங்கினேன்! ஆனால் ஐயனே, நான் சேர்த்து வைத்த என் தீவினையின் தொகுதியால் உருக்கொண்ட எனது ஊழ், உன் அருளைப் பருகும் என் தொண்டையைச் சிறிதாக்கி விக்கலுறச் செய்கின்றதே?! அதை எண்ணித் துன்புற்று அழுகிறேன்! யாவர்க்கும், யாவற்றுக்கும் மேலான பெருமையை உடைய பெரிய பெருமானே!
பலவாறு கிளைக்கும் பிறவி மரத்தை, இனி தழைக்காதவாறு வேரொடு களைந்து, பிறவாநிலையாம் பேரின்பப் பெரும்பித்தைத் தருகின்ற பெருமானே!
தமது அருளால், உயிர்களின் அறியாமையைத் தக்க பொழுதில், தக்கவண்ணம் நீக்கி, பேரின்பமாகிய பெருங்கடலில் சேர்ப்பிக்கும் திறம் படைத்த பெருமானே!
கலைமகள் தலைவன் பிரம்மனும், திருவினை உடையோன் திருமாலும் அடைதற்கியலாது திகைக்குமாறு, நெடுகநின்ற அரிய பெருமானே!
இவ்வெளியோனாகிய அடியேனுள்ளத்துள் தாமாகவே விரும்பித் தோன்றும் எளிய பெருமானே!