ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் 21ம் திகதி ஆரம்பமாகி இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது .
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நவம்பர் 27 அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது. ‘மாவீரர் நாள்’ என்பது அழுது புலம்பும் நாள் அல்ல அது தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள். பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காகக் குருதி சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். பேரரசுவாத (ஏகாதிபத்திய) காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்தக் கார்த்திகை மாதத்தில் நம் நினைவில் பொருத்தி எதிர்காலக் கொள்கைப் பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை எண்ணிப் போற்றி வணங்குகிற பொன்னாள்.
மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்த நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.
தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவார்கள்.
பொதுவாக, தமிழர் தாயகத்தில் மாவீரர் வாரம் முழுவதும் மஞ்சள், சிவப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிட்டு துயிலும் இல்லங்களில் வணக்க நிகழ்வுகள் நடத்தப்படும்.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை பகுதியிலும் மண்ணுக்காக மரணித்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இன்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது மாவீரர்களின் உறவுகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது



















