முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான சாந்தன், தாம் தீவில் உள்ள தனது வயதான தாயுடன் வாழ விரும்புவதாகவும், இதற்கு உதவி செய்யும்படியும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 தமிழர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், எஸ் ஜெயக்குமார், சாந்தன், முருகன், பி ராபர்ட் பயாஸ் ஆகியோர் தமிழக சிறையில் இருந்தனர். 31 ஆண்டுகளாக அவர்கள் சிறை வாசம் அனுபவித்தனர்.
இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவையில் 2018 ல் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து விடுதலை கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பேரறிவாளன் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து பேரறிவாளன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதன்பிறகு மற்ற 6 பேரும் அதனடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். அதாவது நளினி, ரவிச்சந்திரன், எஸ் ஜெயக்குமார், சாந்தன், முருகன், பி ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் சாந்தன், முருகன், எஸ் ஜெயக்குமார், பி ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் ஒருவரான சாந்தன் என்ற சுதந்திர ராஜா இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்துக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் உருக்கமான விஷயங்களை குறிப்பிட்டு தான் இலங்கையில் உள்ள தனது வயதான தாயுடன் வாழ உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சாந்தன் எழுதியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுளேன். இந்த முகாம் என்பது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வெளிநாட்டினர் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் தங்கவைக்கப்படும் இடமாகும். நான் 32 ஆண்டு சிறை வாசம் அனுபவித்தேன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் கூட என்னால் எனது தாயாரை சந்திக்க முடியவில்லை.
எனது தாயார் தற்போது இலங்கையில் உள்ளார். வயதாகி உள்ள அவரை அவரோடு இருந்து கவனித்து கொள்ள எனக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் எனது தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணிக்காக தூதரகத்தில் உள்ளது. நான் எனது தாயாருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். உதவி செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை சேர்ந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை செல்ல விரும்பவில்லை. அங்கு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர்கள் நினைக்கின்றனர். அதேநேரத்தில் வேறு இடத்தில் வாழ தங்களை அனுமதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்துள்ளார். அதாவது ஜெயக்குமார் தரப்பில் சென்னையில் தனது குடும்பத்துடன் வசிக்கவும், ராபர்ட் பயாஸ் நெதர்லாந்தில் உள்ள உறவினர்களுடன் வசிக்கவும் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.