சுகந்தி கல்லூரி படிப்பு முடித்ததும், பேங்க்கில் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு அவருக்கு திருமணம் செய்துவைத்தான் குமார்.
`கொக்கரக்கோ….. கோ’
காலைச் சூரியன் தன் கதிர்களால் புதுப்பட்டியை நனைத்துக்கொண்டிருந்தான். சிவப்பு கலந்த மஞ்சள் ஒளியில் அந்த ஓட்டு வீடு தங்கம்போல தக தக வென ஜொலித்துக் கொண்டிருந்தது. அன்னம்மாள் பாட்டி வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். `கவ்சல்யா சுப்ரஜா ராமபூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே..’ பக்கத்து தெரு அம்மன் கோயிலில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருந்தது.
“ஏலே! இன்னிக்கு பள்ளிக்கூடம் கெடையாதாம்” உருவி விழப்போகும் கால்சட்டையை ஒரு கையில் பிடித்துக்கொண்டே இரண்டாங் கிளாஸ் படிக்கும் குமரேஷ் தெருவழியே சந்தோஷமாய் கூவிக்கொண்டு ஓடினான்.
“ங்கள…. ட்ரு….. ட்ரு” தெருவில் தன் இரண்டு பசு மாடுகளை ஓட்டிக்கொண்டு ராஜமாணிக்கம் தோட்டத்துக்கு போய்க் கொண்டிருந்தார்.
“என்ன மாப்பிள! இன்னும் முழிக்கலியா?, ங்கள….ட்ரு…..ட்ரு ”
ராஜமாணிக்கத்தின் சத்தம் கேட்டு, முன் அறையில் படுத்திருந்த குமார் படுக்கையில் நெளிந்தான். நேற்று சாயந்திரம்தான், ஆஸ்பத்திரிக்குப் போய் காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்டு வந்திருந்தான். அந்த அசதி முகத்தில் தெரிந்தது.
ஓட்டு வீடுதான். ஒரு மேஜை, நாற்காலி, மூங்கில் சோபா மற்றும் கட்டில் போடப்பட்டிருந்த முன் ஹாலை ஒட்டி நாலுக்கு ஆறு ஸ்டோர் ரூம், அதுக்கு எதுத்தாப்ல பத்துக்கு பத்து அடியில் பெட்ரூம். பின்பக்கத்தில் சின்ன சமையல் அறை, கொஞ்சம் தொலைவில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி பாத்ரூம். இதுதான் குமாருக்கும் சுகந்திக்கும் பரந்தாமன் விட்டுச் சென்ற சொத்து. பரந்தாமனை விட்டுப் பிரிய மனமில்லாமல் பார்வதியும் உடன் சென்றுவிட்டாள்.
சுகந்திக்கு 2 வயது மூத்தவன் குமார். 29 வயது ஆகிறது. பக்கத்தில் இருக்கும் நாகர்கோவிலில் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிகிறான். மாதம் இருபதாயிரம் சம்பளம். வாரத்தில் ஒருநாள் விடுமுறை. சுகந்தி கல்லூரி படிப்பு முடித்ததும் பேங்க்கில் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு அவருக்கு திருமணம் செய்துவைத்தான் குமார். அவளுக்கு இது போதாத நேரமோ என்னவோ, திருமணமான மூணாவது மாதத்திலேயே கணவன் வேலைக்குப் போகும்போது பைக்கில் லாரி மோதி மரணித்துவிட்டான். அண்ணன் வீட்டுக்கே திரும்பவும் வந்துவிட்டாள். இப்போது உள்ளூரிலேயே xerox கடையில் வேலை பார்க்கிறாள்.
“அண்ணா, காபி ரெடி”
சுகந்தி சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தாள். சீக்கிரம் சமைத்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் தோல் உரித்த சின்ன வெங்காயத்தை, காபி பாத்திரத்தில் போட்டுவிட்டாள். காபியும் தன்னை மாதிரி ஆகிவிட்டதே என்று நொந்துகொண்டே, வேறு காபி போட ஆரம்பித்தாள்.
குமார் குளித்துவிட்டு வந்திருந்தான்.
சுகந்தி, புட்டும் சிறுபயிறும் செய்து முன் ஹாலில் மேசையில் வைத்திருந்தாள்.
இடுப்பில் கட்டிய ஈர டவலுடன், அப்பா அம்மா படத்துக்கு முன் வந்து நின்று, பத்தி கொளுத்தி வணங்கினான். பெட்ரூமில் போய் துணி மாற்றிக்கொண்டு வந்தவன், நாற்காலியில் உட்கார்ந்து சுகந்தி செய்த புட்டை சாப்பிட ஆரம்பித்தான். சுகந்தி, காபியை எவர்சில்வர் டம்ளரில் ஊற்றிக்கொண்டுவந்து மேசையில் அவன் சாப்பிடும் தட்டு அருகே கொண்டுவந்து வைத்தாள்.
“இன்னிக்கு உனக்கு கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க VAO ஆபீஸ் போயிட்டு அப்படியே கம்பெனிக்குப் போய் விடுவேன். ஏதாவது தேவைப்பட்டா அன்னம்மாள் பாட்டிய கேளு, வேறெங்கேயும் வெளியில் போகாத” கரிசனை கூடிய கண்டிப்புடன் தங்கையிடம் சொன்னான்.
கம்யூனிட்டி சர்டிஃபிகேட்டைக் காட்டித்தான் விதவைக்காக அரசு தரும் பணத்தை வாங்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் வண்டல் பாறையில்தான் VAO ஆபீஸ். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பெருங்குளத்தில் RI ஆபீஸ். VAO ஆபீஸிலிருந்து மனுவை வாங்கிக்கொண்டு போய் RI ஆபீஸில் கொடுக்கணும்.
சட்டை பட்டனை பூட்டிக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்த குமார், வாசலில் கிடந்த செருப்பை கால்களில் மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
“அண்ணே! பையை மறந்துட்டுப் போறியே” என்ற சுகந்தி அந்த A4 சைஸ் ரெக்ஸின் பையை அவனிடம் தந்தாள். அவளின் திருமணத்தின்போது நகைகள் வாங்கியதற்காக பாலு ஜூவல்லரியில் கொடுத்த `பேக்’ அது. புதிதாக இருந்தது.
பையைத் திறந்து பார்த்தான். இரண்டு பேருடைய ஆதார் கார்டு, வோட்டர் ஐடி, ஒரு சில வெள்ளை பேப்பர்கள் எல்லாம் இருந்தன. ஒருமுறை RI அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, மனு எழுதிக்கொண்டு வரச்சொன்னார். பக்கத்தில் ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும் இருந்தது. அங்கும் பேப்பர் இல்லை. அன்றிலிருந்து, ஒரு சில பேப்பர்கள் எப்போதும் கைவசம் வைத்திருப்பான்.
பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
“அண்ணே, நாகர்கோயிலுக்கு தான! நானும் வரட்டுமா, இன்னிக்கு காலேஜ்ல எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு”
`நான் வண்டல் பாறைக்குலா போறேன்’ அங்கெருந்து பெருங்குளத்துக்குப் போகணும். அதுக்கப்புறம்தான் நாகர்கோவில்’
“எடேய், வண்டல் பாறையில என்ன விசேஷம்! பொண்ணு பாக்க போறியா?” எதிர் வீட்டு வாசலில் காலை சூரியனில் குளித்துக்கொண்டிருந்த கண்ணப்பன் தாத்தா கேட்டார்.
`உங்களுக்கு இதை விட்டா வேற வேலையே கிடையாது’ சின்ன எரிச்சலுடன் கிளம்பினான் குமார்.
காலை 8 மணிக்கே VAO ஆபீஸுக்கு வந்துவிட்டான். VAO ஆபீஸில் தலையாரி மட்டும் இருந்தார்.
“சார் இன்னும் வரலியா?”
“தாசில்தார் ஆபீஸுக்குப் போயிருக்கிறாங்க. 10 மணிக்கு மேல தான் வருவாங்க”
வெளியில் வந்தான்.
எதிரே சற்று தள்ளி ஒரு வீட்டில் சாணி மெழுகிய திண்ணை இருந்தது. வீடு பூட்டிக்கிடந்தது. அருகில் பெரிய வேப்பமரம்.
திண்ணையில் போய் உட்கார்ந்தான். வேப்பமரக் காற்று இதமாக இருந்தது. பேன்ட் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து கம்பனிக்கு போன் போட்டான். சூப்பர்வைசர் முருகேசன் போனை எடுத்தார்.
“சார், ஒரு சின்ன வேலை, இன்னிக்கு நான் வர கொஞ்சம் லேட்டாகும்.”
“இன்னிக்கு அர்ஜென்டா `போல்ட் லேத் ஒர்க்’ எல்லாம் முடிச்சி கொடுக்கணுமேப்பா”
“சாயந்திரம், கூட கொஞ்ச நேரம் இருந்து எல்லாத்தையுமே முடிச்சிடறேன் சார்”
“அப்போ சரி. சீக்கிரம் வந்துடு’ முருகேசன் போனை வைத்தார்.
குமாருக்கு நேரம் போகவில்லை. மொபைலில் சீட்டு விளையாட ஆரம்பித்தான்.
“வீஓ இல்லியோ?” சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.
இருபத்தைந்து வயதுதான் இருக்கும் அவளுக்கு. ரேஷன் கடையில் பொங்கலுக்குக் கொடுத்த சேலை கட்டியிருந்தாள். தலையில் எண்ணெய் வழிய தேய்த்து ஒத்தைப் பின்னல் போட்டு அதை கொண்டையாக்கியிருந்தாள். காதில் பெயின்ட் போன கவரிங் கம்மல். மொட்டைக் கழுத்து. வலது கையில் கம்மல் மாதிரியே ஒரு வளையல். இடது கையில் சிவப்பு கலரில் கயிறு கட்டியிருந்தாள். கையில் ஒரு மஞ்சப்பை. அதனுள் ஆதார் கார்டு மற்றும் இன்ன பிற அட்டைகள் இருக்கலாம்.
“10 மணிக்குத்தான் வருவாராம்”
“அப்படியா” என்றவள் கொஞ்ச நேரம் அதிலேயே நின்றாள். கால் வலித்ததோ என்னவோ, திண்ணையில் குமாருக்கு சற்று தள்ளி அமர்ந்தாள்.
குமார், மொபைலில் விளையாடிக்கொண்டிருக்க அவள் அமைதியாய் யோசனையில் ஆழ்ந்தாள். குழப்பமாய் இருந்தது அவளுக்கு. மனதை வேறு திசையில் திருப்பினால் நன்றாய் இருக்கும்போல தோன்றியது.
“என் பையனும் இப்படித்தான். எப்பவும் போன்லேதான் இருக்கான்”
நிமிர்ந்தான் குமார்.
“என்ன படிக்கிறான் உங்க பையன்?”
“மூத்தவன் மூணாப்பு, இளையவன் ஒண்ணாப்பு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டுதான் இங்கெ வாரேன். ஸ்மார்ட் கார்டுல என் மாமியார் பேர சேக்கணும்”
“வீட்டுக்காரர்”
“தோட்ட வேலைக்குப் போனவரு சாயந்திரம் குடிச்சிட்டு கிணத்துல உழுந்துட்டாரு. போதையில சத்தம் போடவும் தெம்பு இல்ல. மறுநாள் காலையில தூக்கினப்போ ஒடம்புல உசிரு இல்ல. நாலு வருஷம் ஆச்சி”
அவள் பேச்சில் எந்த வருத்தமும் தெரியவில்லை. அழுது அழுது மனம் மரத்துப் போயிருக்க வேண்டும். இந்தச் சமுதாய பிரச்னைகளை எதிர்கொள்ளப் பழகிவிட்டாள் என்பது பேசும்போது புரிந்தது.
“கொஞ்சநாள் அழுதுகிட்டு வீட்டு மூலையில முடங்கிக் கிடந்தேன். குடிசை வீடுதான். மாமனார் இல்ல. மாமியார் படுக்கையில. ரெண்டு பசங்க. வாழ்ந்தாகணுமே. 12 வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க அப்பாதான் ப்ரெசிடெண்டு கைய கால பிடிச்சி பால் வாடில சின்னக் குழந்தைகளை பார்க்கிற வேலை வாங்கித் தந்தாரு.”
ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை என்று குமார் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
“அப்பா பக்கத்து ஊர்லதான் இருக்காரு. கொஞ்சம் நெலம் உண்டு. கடல போட்டிருக்காரு. ஒவ்வொரு பருவத்துலயும் விளையுறத வித்து எனக்கும் கொஞ்சம் பணம் தருவாரு. போன வருஷம் வத்தல்ல கொஞ்சம் லாபம் கிடைச்சுது. தரையில படுத்தா பல்லி வருதுன்னு என் பையன்க சொன்னாங்கனு ஒரு கட்டில் வாங்கித் தந்தாரு. எங்க அப்பா எனக்கு எல்லாம் தருவார்” அப்பாவின் பெருமை அவள் பேச்சில் தெரிந்தது.
“இப்ப கூட, தரையில் இருந்து எழுத கஸ்டமாயிருக்கு, மேசையும் நாற்காலியும் வேணும்னு என் பசங்க கேட்டாங்க. கடல வித்த பணத்துல வாங்கித்தர்றதா சொல்லியிருக்காரு. நான் கேட்காமலேயே எனக்கு என்ன வேணும்னு அவருக்குத் தெரியும். எதுனாலும் உடனே செய்து தருவார்.” அடுத்தவரிடத்தில் தானும் கொஞ்சம் வசதியான இடம் என்று காட்ட வேண்டும் என அவள் மெனக்கெடுவது அவனுக்குப் புரிந்தது.
`அப்போ பரவாயில்லை! உங்க அப்பா இருக்கும்போது உங்களுக்கென்ன கவலை’ என்றான் குமார்.
அவள் அமைதியாக இருந்தாள். அருகில் கிடந்த வேப்பங் குச்சியை எடுத்து விரல்களில் பிடித்து சாணி மெழுகிய திண்ணையில் கோலம் வரைந்தாள்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நீட்டி, நெட்டி முறித்தவள், அண்ணாந்து வாய்த்திறந்து கொட்டாவி விட்டாள்.
அவன், அவள் கண்களைப் பார்த்தான்.
கைகளை கீழே இறக்கி, குனிந்துகொண்டாள்.
கொஞ்ச நேரம் மவுனம்.
“கட்டில் மேஜையெல்லாம் வாங்கித் தர்றதுக்குப் பதிலா எங்க அப்பா எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கலாம்.”
வேப்பமரத்தில் இருந்த காக்கா ‘கா….கா…..’ என்று கரைந்து அவள் பேச்சை ஆமோதித்தது.
அவனின் நெஞ்சில், தங்கை சுகந்தி ஈட்டியைப் பாய்ச்சுவது போல் இருந்தது.
`என்னங்க…’ அவள் மவுனத்தைக் கலைத்தான் குமார்.
நிமிர்ந்தவள் கண்களில் கண்ணீர்.
குமாரின் கைகள் அவளின் கண்ணீரைத் துடைப்பதற்காக நீண்டது.
நன்றி-ஜே.ஞா