தமிழீழ உணர்வாளரும் தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழீழ தேசியத்தலைவர் மீது அளப்பரிய அன்பு கொண்டவருமான சத்தியராஜின் தாயார் இன்று இயற்கை எய்தினார்.
நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94. இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார்.
நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். செய்தியறிந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லன் வேடங்கள் ஏற்று மிரட்டியவர் பின்னாளில் கதாநாயகனாக மாறி பல திரைப்படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் பல அம்சங்கள் மக்களால் ரசிக்கப்பட்டாலும், அவரது நையாண்டித்தனமான பேச்சும், நக்கலான உடல் பாணியும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் நடிகர்கள் மணிவண்ணன் மற்றும் கவுண்டமணியுடன் இணைந்து இவர் அடித்த காமெடி கலாட்டாக்கள் இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அதன் பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் போக, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இயற்கை எய்திய தாயார் நாதாம்பாள் காளிங்கராயருக்கு தமிழீழ மக்கள் தங்களது இதய பூர்வமான அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.