திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை முடிந்து கருணாகர் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்து கலாசார மரபுகளை உலகமயமாக்கல் திட்டத்தின் கீழ், ராமகோடி (ராம் ராம் என கோடி முறை எழுதுவது) எழுதுவதைப் போல் கோவிந்த கோடி எழுதுவது ஊக்குவிக்கப்படும். 25 வயதுக்கு குறைவான இளைஞர்கள் ஒரு கோடி முறை கோவிந்த நாமத்தை எழுதினால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விஐபி தரிசன வசதி ஏற்படுத்தி தரப்படும். 10,01,116 முறை எழுதி வருபவர்களுக்கு (ஒருவருக்கு) விஐபி தரிசனம் பெற ஏற்பாடு செய்யப்படும். பாரம்பரிய வழக்கங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆந்திர மாநிலத்தில் எல்.கே.ஜி. முதல் பிஜி வரை படிக்கும் மாணவர்களுக்கு நீதிபோதிக்கும் நோக்கத்தில் பகவத் கீதையில் உள்ள ஆன்மீக பக்தி சிந்தனையுடன்கூடிய மனித நேயத்தை வளர்க்கும் கருத்து கொண்ட 20 பக்க புத்தகம்,‘புத்தகப் பிரசாதமாக’ விநியோகிக்கப்படும். மொத்தம் 1 கோடி புத்தகங்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பதியில் 1952 ஆண்டு பக்தர்களுக்காக கட்டப்பட்ட பழையயான 2, 3 சத்திரங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் ₹ 600 கோடியில் 20,000 பக்தர்கள் தங்கும் விதமாக அச்சுதம், ஸ்ரீபாதம் என இரண்டு ஓய்வறைகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ் கட்டப்படும்” என தெரிவித்தார்.