அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. இந்த ரெய்டுக்கான காரணமாக அரசியல் விமர்சகர்கள் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக புதியதாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் மாநிலத்தில் அதிக அளவு இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலத்தில் திமுகவை வளர்ப்பதில் செந்தில் பாலாஜி காட்டிய தீவிரம் கொஞ்சம் நஞ்சமல்ல. கோவை உட்பட கொங்கு மண்டலத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இவர் இடையூறாக இருந்ததால்தால் பாஜக ரெய்டு நடத்தி இவரை தூக்கியது என்று விமர்சிக்கப்படுகிறது.
அதேபோல அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களிலும் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இவருக்கு ரூ.50,219.37 கோடி சொத்து இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் ரெய்டில் ஈடுபட்டனர். ஜெகத்ரட்சகன் தனக்கு சொந்தமான கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது நபராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை வருமான வரித்துறை குறி வைத்திருக்கிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில்தான் இந்த ரெய்டு மேற்கொள்ளப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் மற்றும் சென்னையில் அவருக்கு தொடர்புடையவர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. மேலும் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் இல்லங்களிலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது.
இந்த ரெய்டு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை என்பது அதிகம் பணம் புழங்கும் துறை. இதில் நிச்சயம் ஏதாவது முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதன் அடிப்படையில்தான் இந்த ரெய்டு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறையினர் ஏற்கெனவே திரட்டியிருப்பார்கள். அதேபோல திமுகவுக்கு நிதி வழங்கும் முக்கிய நிதி ஆதாரமாக எ.வ.வேலு இருக்கிறார்.
கலைஞர் டிவியின் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதுவரை இவர்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கான நிதி இவருக்கு எங்கிருந்து வருகிறது? இதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா என்கிற கோணத்தில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கட்சிக்கான நிதி ஆதாரங்களை முடக்குவது கூட இந்த ரெய்டின் முக்கிய நோக்கமாக இருக்கலாம். வருமான வரித்துறையினர் சோதனை என்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த காலங்களில் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இது நடந்திருக்கிறது. ஆனால் தற்போது பிரச்னை என்னவெனில் வருமான வரித்துறையினரை தொடர்ந்து அமலாக்க துறையினரும் ரெய்டுக்கு வருவார்கள். எனவேதான் இந்த ரெய்டுகள் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுகின்றன. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த ரெய்டு சில முக்கிய நிதி ஆதரங்களை முடக்கும் நோக்கி நடத்தப்படலாம்” என்று கூறியுள்ளனர். முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.