இதனை நான் என்னவென்று சொல்வது?
தன் உதிரம் தந்தது
எனக்கு உருவம் கொடுத்தவள்
எனைப் பெற்றத் தாய்
பரஞ்ஜோதி.
தன் உதிரம் கொடுத்து
என் உருவம் செய்தவள்
நான் பெற்றத் தாய்
என் மகள் பரஞ்ஜோதி.
என்னையும் அவளையும் சேர்த்து ஓவியம் வரைய அவள் இரத்தம் கொடுத்த செய்தியறிந்து துடிதுடித்துப் போனேன்.
இந்த வயதிலும் காய்ச்சலோ இருமலோ வந்து ஊசிப் போடும் நிலை ஏற்படும் போதும் அல்லது ஏதாவது பரிசோதனைக்கு இரத்தம் எடுக்கும் போதும் “வலிக்கும்” என சொல்லி முரண்டு பிடிப்பதும் கெஞ்சியோ அல்லது சூழலுக்கு தகுந்தார் போல் செல்லமாக மிரட்டியோ சம்மதிக்க வைக்கும் நிலையில் உடல் நடுக்கத்தோடு கண்களை மூடி பல்லைக் கடித்து இறுக என் கைப்பற்றுபவள் எப்படி இப்படியான பெரியதொரு ஓவியத்திற்கு இரத்தம் கொடுத்தாள் என்று அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
பரிசோதனைக்கு கூட பதறி துடிச்சு அப்பா கைய புடிச்சுக்குவியே… அப்பா இல்லாம எப்பிடி குட்டீ தனியா போயி இவ்வளவு இரத்தத்த குடுத்த… என்று கண்ணோரத்தில் நீர் கசிய கேட்டேன்.
அப்பாவ மனசுல நெனச்சுக்கிட்டேன்… குடுத்துட்டேன் போங்கப்பா… என்று சொல்லியபடி ஒன்றரைக்கு ஒரு அடி அளவில் சட்டமிடப்பட்ட இந்த ஓவியத்தை என் பிறந்தநாள் பரிசாக கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள். தளம் கட்டி நின்ற கண்ணீர் உடைந்து என் கண்ணங்களில் உருண்டு கொண்டிருந்தது.
இதனை கொடுத்த நாள் முதல் எங்கு மாட்டுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் கொப்பளித்துக் கொண்டேயிருக்கிறது.
எத்தனையெத்தனை துரோகங்கள், எண்ணிலடங்கா ரணங்கள். அத்தனைக்கும் மருந்து அவள் முகத்தைப் பார்க்கும் போதும் அவளோடு சிறிது நேரம் உரையாடும் போதும் அது அத்தனையும் மறைந்து போகும் அல்லது கறைந்து போகும்.
என் தாயின் பெயரை அவளுக்கு வைத்ததினாலோ என்னவோ என் தாய் இல்லாது போன இந்த நிலையிலும் அவள் பிறந்த நாள் முதல் இதுவரை அளவற்ற அன்பையும் பாசத்தையும் ஒரு மழையைப் போல என்மீது பொழிந்து கொண்டேயிருக்கிறாள்.
இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்ய முடியும். நம்பிக்கையில்லைதான் ஆனாலும் சொல்கிறேன். இன்னொரு பிறப்பிருந்தால் உன் வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் தாயே.
அப்பா
வ.கௌதமன்