அன்புள்ள அம்மாவுக்கு
தாலாட்டித் தூங்கவைக்க
தாயே நீ அருகிலில்லை
நாலு வார்த்தை பேச இங்கு
நாலு சுவற்றைத்தவிர எதுவுமில்லை
நானென்ன பிழை செய்தேன்
ஏனென்னை பெத்தாயம்மா
நீயென்ன பிழை செய்தாய்
நான் வந்து பிறந்தேனம்மா
கறையானும் எறும்பும் என்ர
கதை கேட்டு அழுதிருக்கு
கம்பியெல்லாம் கறள் பிடிக்க
கண்ணீரே காரணமாயிருக்கு
பகலிரவு தெரியவில்லை
பாக்க யாரும் வரவுமில்லை
சுகவிபரம் அறியவில்லை
சொல்லியழ ஆருமில்லை
சுமையாய் ஏன் இருப்பானெண்டு
சுவத்தோட முட்டப் போவன்
சாந்தன் எண்டு ஒரு குரல்
அந்தக் குரல் என்னை தடுத்துவிடும்
வாலிபம் தேஞ்சு போனபின்னும்
வயசாகி வருத்தம் வந்தபின்னும்
வலுவிழந்து சுருண்ட பின்னும்
வாழுறதே உனக்காகத் தானே அம்மா
வானம் பாத்த பூமி போல
வறண்டு போய்க் கிடக்கிறனே
காணவேணும் உன்னையம்மா
கதறியழ வேணுமம்மா
ஓடி நானும் வந்திடுவன்
ஒரு வாய் சோறு ஊட்டிவிடு
மடி மேல நான் தூங்க
மெதுவா தலை வருடிவிடு
அம்மா எண்டு நான் அழைச்சா
ஆறுதலா எனக்கிருக்கும்
அப்பன் எண்டு நீ அழைச்சா
அதைவிட வேற மருந்திருக்கோ
வேண்டுதல் ஒண்டும் வீண்போகாது
வேளா வேளைக்கு சாப்பிடம்மா
ஒண்டுக்கும் நீ யோசியாதை
உன்ர பிள்ளை சாந்தன் வருவன்
எத்தனை ஏக்கங்கள் அவனுக்குள்
எப்படி நாம் ஆறுதல் அடைவோம்