நேற்றைய தினம்(13) அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர அரசாங்கத்தில் அசோக ரன்வல சபாநாயகராக நியமிக்கபப்ட்டிருந்தார். எனினும் அவரது கல்வித்தகமை பல்வேறு சர்ச்சைகளை தோற்றியிருந்தது.மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் BSc பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அவரது பெயருடன் கலாநிதி என்ற பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக அசோக ரன்வல கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள சர்ச்சை காரணமாக சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனது கல்வித் தகுதி தொடர்பாக எந்த பொய்யான தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும் அசோக ரன்வல தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கு மூவர் முன்மொழியப்பட்டுள்ளன.இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டது.எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
ராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.