2022 ஆம் ஆண்டின் பொருளாதார அனர்த்தத்துக்கு காரணமாக இருந்தவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான நம்பகத்தன்மையை கொண்டவர்கள் அல்ல.ஊடகங்களில் வெளியாகும் கவனத்தை ஈர்க்கும் செய்திகள் பெரும்பாலும் அரசாங்க தலைவர்களின் கடந்தகால தவறுகள் அல்லது குறைபாடுகளுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. அவற்றில் சில புதிய கொள்கை வகுப்பாளர்களின் அனுபவமின்மையுடன் தொடர்புடையவையாக உள்ளன. அவர்களில் பலர் அரசியல் அல்லது பொது நிருவாகத்தை விடவும் கல்வித்துறையில் தங்களது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்களாக இருக்கிறார்கள்.
பொருளாதார கஷ்டங்கள் தொடர்பான விமர்சனங்களே மக்களுக்கு உண்மையானவையாக தெரிககின்றன. அந்த கஷ்டங்களை மக்கள் முழு அளவில் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பல தசாப்தங்களாக தங்களது செயற்பாடுகளின் மூலமாக
ஊழல் இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதி தொடர்பில் அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து வருகிறது. ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் கடந்த கால துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் அரசாங்கம் நேராமையாக இருக்கிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து இருக்கிறது.
அதிகாரத்துக்கு வந்து நான்கு மாதங்களுக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடுமையான விமர்சனங்களையும் நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் மீட்டெடுப்பதற்கு அவசியமான கொள்கைகளை வகுப்பதில் அதன் ஆற்றல் தொடர்பான சந்தேகங்களையும் அதிகரித்த வகையில் எதிர்நோக்குகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி மக்கள் மீதான சுமையை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படாதது குறித்து ஏமாற்றமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது. அரிசி ஆலை உரிமையாளர்களும் ஹோட்டல்களும் பெரிய இலாபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, நிலையான வருமானத்தைக் கொண்டவர்களும் தங்களது குடும்பத் தேவைகளுக்காக விவசாயம் செய்பவர்களும் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள்.
பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் வீழ்ச்சியடைந்த ஒரு பொருளாதாரத்தை பொறுப்பேற்றதே அரசாங்கத்தின் அடிப்படைப் பிரச்சினையாகும். சர்வதேச நாணய நிதியத்துடனும் சர்வதேச பிணைமுறியாளர்களுடனும் முன்னைய அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கைகள் பேரம் பேசுவதில் இலங்கையின் பலவீனமான நிலையைப் பிரதிபலித்தன. அதன் காரணத்தினால்தான் கடன் மறுசீரமைப்பின்போது மற்றைய நாடுகள் 50 சதவீத கடன் குறைப்பைப் பெற்றுக்கொண்ட அதேவேளை இலங்கை 20 சதவீத கடன் குறைப்பை பெற்றது.
இந்த நிலைவரத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொள்ளமுடியாது. நாம் எதிர்நோக்கும் சிக்கலான பொருளாதார சூழ்நிலையில் இருந்து எம்மை பெருந்தன்மையான ஒரு கொடையாளி விடுவிப்பார் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயங்களின்போது இலங்கை கொண்டிருந்த யதார்த்தபூர்வமற்ற எதிர்பார்ப்புகளின் மூலமாக தெளிவாகத் தெரிந்தது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் 1848 ஆம் ஆண்டில் பிரிட்டனின் 19 ஆம் நூற்றாண்டு பிரதமர்களில் ஒருவரான பால்மேர்ஸ்ரன் பிரபு ” எமக்கு நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நிரந்தரமான எதிரிகளும் இல்லை.எமக்கு நிரந்தரமான நலன்களே இருக்கின்றன.
அந்த நலன்களை பேணிக்காப்பதே எமது கடமை” என்று கூறியிருந்தார். பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையை நியாயப்படுத்த அளித்த விளக்கத்திலேயே அவர் அவ்வாறு கூறினார். ஒரு நாட்டின் தீர்மானங்கள் மற்றைய நாடுகள் மீதான நிலையான விசுவாசங்களினாலோ அல்லது கோட்பாடுகளினாலோ அன்றி அதன் மூலோபாய நலன்களினாலேயே வழிநடத்தப்படுகின்றன என்பதே அவரின் கூற்றின் அர்த்தம்.
ஐரோப்பாவில் முற்போக்கு புரட்சிகளை ஆதரித்த அதேவேளை உலகின் வேறு பாகங்களில் காலனித்துவ ஆதிக்கத்தை பேணிக்காத்தமை போன்ற பிரிட்டனின் சர்ச்சைக்குரிய கூட்டணிகளையும் தலையீடுகளையும் அவரின் அந்த வாதம் நியாயப்படுத்தியது. இன்று சர்வதேச சமுகத்தினால் பயன்படுத்தப்படுகின்ற சீரற்ற சட்ட மற்றும் தார்மிக நியமங்கள் மூலமாக இதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மற்றைய நாடுகளுடன் இலங்கை ஊடாட்டங்களைச் செய்யும்போது பால்மேர்ஸ்ரன் பிரபுவின் கட்டளையை மனதில் வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும். சட்டத்தின் ஆட்சி மற்றும் உலகளாவிய மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிக்கொண்ட நாடுகளின் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க ஒரு நகர்வு ஏற்பட்டிருப்பதை கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இரண்டாவது உலகப்போரில் வெற்றிபெற்ற வல்லாதிக்க நாடுகள் சர்வதேச அரங்கில் அவற்றின் ஊடாட்டங்களில் மனித உரிமைகளில் தாராளவாத பண்புகள், ஜனநாயகம் மற்றும் நீதிக்கு தலைமைத்துவத்தைக் கொடுத்த்ஒரு நீண்டகாலம் இருந்தது.
ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் உட்பட பல நிறுவனங்களையும் அந்த வல்லாதிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து அமைத்துக்கொண்டன. ஆனால், இன்று அந்த தாராளவாத சர்வதேச ஒழுங்கு சிதறுப்பட்டு விட்டது. ஈராக்,லிபியா, சிரியா, உக்ரெயின் மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் காணக்கூடியதாக இருக்கும் நிகழ்வுகள் பலவீனமான நாடுகளுக்கு எதிரான பலம்ன நாடுகளின் காட்டு மிராண்டித்தனமான நடத்தைகளை பிரதிபலிக்கின்றன.
தற்போது வெளிக்கிளம்புகின்ற எதேச்சாதாகார சர்வதேச ஒழுங்கை நோக்கி உலகளாவிய அதிகாரம் நகருவதால் தாராளவாத சர்வதேச ஒழுங்கு அதன் பிடியை இழக்கின்றது என்று ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒலிவர் றிச்மண்ட் போன்ற சர்வதேச கல்விமான்கள் கூறுகிறார்கள்.
உலகின் முக்கிய முரண்நிலைகளை தீர்த்துவைப்பதற்கு தாராளவாத சர்வதேச ஒழுங்கு தவறியதில் இருந்து அதன் பலவீனம் எவ்வாறு அம்பலப்பட்டது என்பது குறித்து ஒலிவர் றிச்மண்ட் எழுதியிருக்கிறார்.
சைப்பிரஸ் சமாதானப் பேச்சுவார்த்தைகள் போன்ற தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் இஸ்ரேல் — பாலஸ்தீன நெருக்கடியில் ஒஸ்லோ உடன்படிக்கைகளின் முறிவு போன்றவை மேற்கத்தைய ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமையின் மட்டுப்பாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
தாராளவாத பண்புகளுக்கு மேலாக அரச இறைமை மற்றும் அதிகாரத்துக்கு வெளிப்படையாக முன்னுரிமை கொடுக்கும் சீனா, ரஷ்யா போன்ற வல்லாதிக்க நாடுகளின் எழுச்சி ஒரு பல்துருவ எதேச்சாதிகார சர்வதேச ஒழுங்குக்கான நகர்வைக் குறித்து நிற்கிறது. இதில் மற்றைய நாடுகளுக்கு பாதிப்பாக அமைந்தாலும் கூட ஒவ்வொரு நாடும் தனக்கு உச்சபட்ச அனுகூலத்தை அடைய முயற்சிக்கிறது.
தாராளவாத சர்வதேச ஒழங்காக இருந்தாலெனன்ன அல்லது எதேச்சாதிகார சர்வதேச ஒழுங்காக இருந்தாலென்ன இரணடுமே நீதி அல்லது சமத்துவத்துக்கான இரு பற்றுறுதியை விடவும் புவிசார் அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவை நிலைபேறான சமாதானத்தைக் கொண்டு வரக்கூடியவையாக அமைந்திருக்கவில்லை என்று பேராசிரியர் றிச்மண்ட் எச்சரிக்கை செய்கிறார்.
தாராளவாத சர்வதேச ஒழுங்கு அதன் நோக்கு என்று முன்னர் வெளிக்காட்டி நின்ற சமாதான முயற்சிகளின் விளைவான மனித உரிமைகள், அபிவிருத்தி, தாராளவாதம் மற்றும் ஜனநாயகமும் அரசியல் சீர்திருத்தமும் எதேச்சாதிகார சர்வதேச ஒழுங்கின் ஆதரவாளர்களினால் தற்போது முரட்டுத்தனமாக திணிக்கப்படுகின்ற புவிசார் அரசியல் சமநிலைப்படுத்தல் மற்றும் எதேச்சாதிகார முரண்நிலை முகாமைத்துவத்தை விடவும் சாதாரண மக்களுக்கு நீதியானதும் நிலைபேறானதுமாகும்.
நேர்மைக்கும் நிலைபேறுக்கும் முன்னுரிமை கொடுக்கின்ற ஒரு புதிய அணுகுமுறை இல்லாத பட்சத்தில் உலகம் மேலும் பிளவுக்கும் உறுதிப்பாடின்மைக்கும் உள்ளாகும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்று அவர் வாதிடுகிறார்.
ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவுக்கு இந்தியாவிலும் சீனாவிலும் வழங்கப்பட்ட அரச வரவேற்பை தொடர்ந்து அவ்விரு நாடுகளிடமிருந்தும் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஒரு பெரும் ஊக்குவிப்பைத் தரக்கூடிய ஆதரவு கிடைக்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியின் உச்சக் கட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் முன்னென்றும் இல்லாத வகையில் இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற 400 கோடி டொலர்கள் பொருளாதார ஆதரவுக்கு பிறகு சீனாவிடமிருந்து வரப்போவதாக ஊடகங்களில் கூறப்படும் சுமார் 1000 கோடி டொலர்கள் முதலீடு பெரும் நம்பிக்கையை தருகிறது.
இந்தியாவும் சீனாவும் துரித பொருளாதார அபிவிருத்தியையும் சுய நிலைபேற்றுத்தன்மையையும் நோக்கி இலங்கை முன்னேறக்கூடியதாக அதன் பொருளாதாரத்தை மாற்றும் வல்லமை கொண்ட இரு அயல் நாடுகள். உலகில் பொருளாதார ஆசியாவை நோக்கி உலக நகருகின்ற சூழ்நிலையில் இத்தகைய நிலைவரம் தோன்றியிருக்கிறது.
இந்தியாவும் சீனாவும் இலங்கை தங்களது சுற்றுப்பாதைக்குள் வரவேண்டும் என்று அக்கறை கொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்களைப் பொறுத்தவரை, ஒன்றுடன் ஒன்று வலுவான போட்டியையும் ஐயுறவுகளையும் கொண்ட நாடுகளாகும்.
இராணுவ மோதல்களுக்கு வழிவகுத்த எல்லைத் தகராறுகள் இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கின்றன. பேராசிரியர் ஒலிவர் றிச்மண்ட் கூறியிருக்கின்ற எதேச்சாதிகார சர்வதேச ஒழுங்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடத்தைகள் மீதும் இலங்கை போன்ற நாடுகளுடனான அவற்றின் நடத்தைகள் மீதும் செல்வாக்கிற்கு உட்படுத்தக்கூடியதாகும்.
இவ்விரு நாடுகளுக்கும் விஜயங்களை மேற்கொண்டபோது ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க இந்த பிரச்சினையை அறிந்துகொண்டிருப்பார் என்று தெரிகிறது. இரு நாடுகளினதும் பாதுகாப்புக்கு ஊறு விழைவிக்கக்கூடிய எந்த நடவடிக்கையில் இலங்கை ஈடுபடாது என்று தனது விஜயங்களின்போது அவர் உறுதியளித்திருக்கிறார்.
மூன்றாவது நாட்டுக்குள் வெளிநாட்டு அரசாங்கங்கள் ஊடுருவல்களைச் செய்யும்போது நிரந்தர நட்புறவை விடவும் நிரந்தர நலன்களின் அடிப்படையிலேயே செயற்படுகின்ற என்ற பாமேர்ஸ்ரன் பிரபுவின் கட்டளையை மனதில் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
பொதுவான அரசியல் கோட்பாடுகள், நீண்டகால நட்புறவு மற்றும் பொதுவான கலாசாரம் அல்லது மத்த்தின் விளைவாக எங்களுக்கு உதவுவதற்கு மேலதிகமாக அடியெடுத்து வைக்கும் என்று நம்புவதை விடவும் இலங்கை அதன் சொந்த நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானதாகும்.
வெளிநாடுகள் எமக்கு தருவதற்கு முன்வருகின்ற ஒவ்வொரு உதவியையும் இலங்கையும் அதன் தலைவர்களும் குடிமக்களும் யதார்த்தபூர்வமான ஒரு முறையில் நோக்கவேண்டும். ஒவ்வொரு உதவியையும் அதன் தகுதியின் அடிப்படையிலேயே மதிப்பிட வேண்டும். வெளிநாடுகள் எமக்கு உதவுவதற்கு பெருந்தன்மையே உந்துதலாக இருப்பதாக நாம் நினைத்து விடக்கூடாது.
இலங்கை உறுதியான நாடாக வருவதற்கு வெளிநாடுகளின் ஒவ்வொரு உதவியையும் சொந்த நலன்களின் அடிப்படையில் தெளிவான சிந்தனை கொண்டு நோக்க் வேண்டியது அவசியமாகும். மக்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு இசைவானதாக வெளிநாட்டு உதவிகளின் பயன்கள் அமைவதை உறுதிசெய்ய வேண்டும்.
உலகத்துடனான எமது நாட்டின் ஊடாட்டங்களை நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையும் ஆழமான ஆய்வும் வழிநடத்தவேண்டும். இதை கட்சி அரசியல் நலன்களினால் திசைதிருப்பப்படாமல் இருதரப்பு கருத்தொருமிப்பின் அடிப்படையில் செய்வதே சிறந்தது.
கட்சி அரசியலும் குறுகிய நோக்குடனான அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களே ஒரு சில விதிவிலக்குகள் தவிர எமது தோல்விகளுக்கு காரணமாக அமைந்தன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.