வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுப்பொருள்களை அரசு கஜானாவுக்கு அளிக்காமல் முறைகேடு செய்த வழக்கில், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான், கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் ஆட்சியை இழந்தார். அவரைத் தொடர்ந்து, ஷெபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்றார். அதன் பின்னர் ஆளுங்கட்சி, இம்ரான் மீது ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தது.
கடந்த மே மாதம்கூட, அல்-காதர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், 2018 முதல் 2022 வரை இம்ரான் கான் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், வெளிநாட்டுப் பயணங்களின்போது, அந்த நாட்டுத் தலைவர்கள் அவருக்கு அளித்த விலையுயர்ந்த பரிசுப்பொருள்களை அரசு கஜானாவுக்கு அளிக்காமல், தானே வைத்துக்கொண்டதாகவும், விற்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில் இஸ்லாமாத் நீதிமன்றத்தில் இன்று இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹுமாயூன் திலாவார் (Humayun Dilawar), இம்ரான் கானை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அதுமட்டுமல்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு இம்ரான் தேர்தலில் போட்டியிடவும் நீதிமன்றம் தடைவிதித்தது.
ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தன்னுடைய சட்ட வல்லுநர்குழு உடனடியாக மேல்முறையீடு செய்யும் என்றும் இம்ரான் கான் கோரியதாகக் கூறப்படுகிறது. அதோடு, தங்கள் தரப்பில் சாட்சியங்களை முன்வைக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. வாதங்களை முடிக்க நேரம் சரியாக ஒதுக்கப்படவில்லை என்றும், இம்ரான் கானின் சட்ட வல்லுநர்குழுவில் ஒருவர் கூறினார். எவ்வாறாக இருப்பினும், தண்டனை விதிக்கப்பட்டவுடனே இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டார்.