யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 4 கடற்தொழிலாளர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வல்வெட்டித்துறை, முள்ளியான், கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 04 கடற்தொழிலாளர்களும் கடந்த 07ஆம் திகதி ஒரு படகில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
இதன்படி, தொழிலுக்கு சென்ற நால்வரும் 05 தினங்களுக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும், ஆனாலும் அவர்கள் 12 நாட்களாக கரை திரும்பவில்லை என பருத்தித்துறை காவல் நிலையத்தில் கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை காவல்துறையினர் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ள நிலையில் கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இருந்தும், இலங்கை கடற்படையினரோ, மீனவ சங்கங்களோ தொடர்ந்து தேடுதலுக்குரிய எந்த நடவடிக்கைகளும் எடுக்காத பட்சத்தில் படகில் காணமல் போன இராமகிருஷ்ணன் (இராமகிட்டு) என்பவரின் மூத்த சகோதரரான ரகு என்பவர் தனது உறவினர்கள் நண்பர்களுடன் மயிலிட்டி துறைமுகத்தில் இருந்து கடந்த 22.07.2024 அன்று ஒரு வள்ளத்தில் தேடுதல் முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், காணமல் போன மீனவர்கள் பற்றிய எந்த விபரமும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.