உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் 01.03.2024 அன்று அதிகாலை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் வீடொன்றில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி கூட்டமொன்றை நடத்தியதாக குறிப்பிட்டே இவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகிலுள்ள வீடொன்றில் சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனப்படும் ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-03-10ஆம்திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த ஸஹ்ரான் பிரிவைச் சேர்ந்த 03 பேர் உட்பட 30 பேர் ஒன்றுகூடிய நிலையில் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஸஹ்ரான் ஹாசிமின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்றுகூடினார்களா ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.