மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (24.08.2023) அன்று காலை நடைபெற்றுள்ளது. இது குறித்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா,சன்னார் கிராமத்தைச் சேர்ந்த கணபதி காளிமுத்து ஆகிய இருவருமே கொல்லப்பவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் இருவரும் குடும்பஸ்தர்கள் என்றும் ஜேசுதாசன் அருந்தவராஜா மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் கணபதி காளிமுத்து 5 பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிசார்தகவல் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜாவே இவ்வாறு இறந்தவர்களில் ஒருவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கணபதி காளிமுத்து , ஜேசுதாசன் அருந்தவராஜாவின் வயலில் வேலைக்கு சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற இரு சகோதரர்களின் இரட்டை கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.