துபாயிலிருந்தவாறு மறைந்து செயற்படும் புலிகளுடனும் தொடர்புடைய பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம், கப்பம்அறவிடுதல், கொலைகள் என்பவற்றை இக்குழு துபாயிலிருந்தவாறு இலங்கையில் மேற்கொள்கிறது. இக்குழுவினரை அந்நாட்டுப் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து நாட்டுக்குக் கொண்டு வர, பொலிஸ் திணைக்களமும் சட்டம், ஒழுங்கு அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.34 பாதாளக் குழு உறுப்பினர்கள் துபாயிலிருந்தவாறு இலங்கையில் பல குற்றச் செயல்களைப் புரிந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் இரு வலையமைப்புச் செயற்படுவதாகவும் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. இவ்வலையமைப்பை இயக்கிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, மேலும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு குறித்த தகவல்களை வெளியாக்கினர். இவ்வாறு மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கில் கப்பம் கோரும் துபாயில் பதுங்கியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் இருவர் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயற்பாடுகளை கொண்டவர்கள் புலிகள் அமைப்பின் சர்வதேச வலைப்பின்னலுடன் தொடர்பு பட்டு தங்களின் செயல்களை செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அண்மைகாலங்களில் இந்தியாவில் இருந்து செயற்பட்ட இவ்வாறான செயற்பாடுடையவர்களை மத்திய புலனாய்வு முகமையகம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.