தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ரேசன் கடைகள் இன்றும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள் நவம்பர் 10ம் தேதியும் திறந்திருக்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புழுங்கல் அரிசி, கோதுமை, பச்சரிசி உள்ளிட்டவைகளை இலவசமாகவும் சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. இது தவிர துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு அரசு தரப்பில் ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏற்கனவே விநியோகம் செய்யப்படும் பொருட்களுடன் துவரம் பருப்பு மற்றும் 1 பாக்கெட் பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்பொழுது புதுவித அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
பண்டிகை மாதங்களில் ரேசன் பொருட்கள் வாங்குவது கணிசமாக அதிகரிக்கும். காரணம் வித வித பலகாரம் செய்வதற்காக மக்கள் ரேசன் பொருட்களை வாங்குவார்கள் என்பதினால் சர்க்கரை, பாமாயில், பச்சரிசி உள்ளிட்டவைகளின் தேவை அதிகமா இருக்கும். இதனை கருத்தில் கொண்டு ரேசன் பொருட்கள் கொள்முதலை அதிகரிக்க உணவுத்துறை வழங்கல் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.
அதன்படி பண்டிகை காலங்களில் ரேசன் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் ரேசன் ஊழியர்கள் வெளியில் விற்று விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அனைவரின் மத்தியிலும் எழுந்து வருகிறது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அதை கட்டுப்படுத்த கிடங்குகளில் பொருட்களை ஏற்றும் பொழுதும் அதேபோல் ரேசன் கடைகளில் பொருட்களை இறக்கும் பொழுதும் அவற்றை புகைப்படம் எடுத்து உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேசன் பொருள் கடத்தல் தடுக்கப்படுவதோடு மக்களுக்கு உரிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடை இன்றி வழங்க முடியும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரே தவணையில் வழங்க வேண்டிய அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து தினந்தோறும் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டுமென்று மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வரும் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே ரேசன் கடைகள் வெள்ளிக்கிழமையான இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் ரேசன் கடைகள் நவம்பர் 10 வெள்ளிக்கிழமையும் திறந்திருக்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.