திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் சிறிமாபுர மீனவ குழு ஒன்று இன்று காலை ஜமாலியா பகுதியில் திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி வருவதாகவும் இதனால் சிறிமாபுர பகுதியில் வசித்துவரும் சிறு மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிராக திருகோணமலை சிறிமாபுர மீனவர்கள் இன்று திங்கட்கிழமை காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சட்டவிரோத செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்ட இடத்திற்கு வருகைதந்த திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி மீனவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.