வவுனியாவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து போலீசார் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது , வவுனியா, ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் இடியன் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பிரேதத்தை தாங்கள் கைப்பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஓமந்தை பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் குஞ்சுக்குளம் பகுதியில் தோட்டச் செய்கையில் ஈடுபட்டுவந்துள்ளார்.சம்பவத்தில் ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த ச. டிசாந் என்ற 21 வயதான இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அவரது சடலத்திற்கு அருகில் இடியன் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதுடன் அண்மையில் நெடுங்கேணிப்பகுதியிலும் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.