இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை துணைத்தூதரகம் தற்காலிக கடவுச்சீட்டை வழங்கியுள்ள நிலையில் மிக விரைவில் இலங்கை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு மாதகாலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாந்தன் சிகிச்சை பலனின்றி பெப்ரவரி 28ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
இலங்கை திரும்புவதற்கு அனுமதி வழங்குவதில் திட்டமிட்டு காலத்தை இழுத்தடித்தன் மூலம் சாந்தனி உயிர் பறிக்கப்பட்டிருதமை உலகத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன் எஞ்சிய மூவரது நிலை குறித்தும் பெரும் கவலை ஏற்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் இருந்தே வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குமாறு கோரி முருகன் உள்ளிட்டோர் அண்மையில் சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தில் நேரில் முற்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களது சாகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை வழங்குவதில் இந்திய ஒன்றிய அரசு சாதகமான சமிக்ஞையினை வெளிப்படுத்தவில்லை என துணைத்தூதரக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை திரும்புவதாக இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை துணைத்தூதரக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக மூவரும் இலங்கை திரும்புவதற்கு ஏதுவாக தற்காலிக கடவுச்சீட்டு துணைத்தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி இந்திய ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (26) செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் மூவருக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான பயண ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதும் விமான பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளப்பட்டு இலங்கை திரும்ப உள்ளதாக முருகனின் வழங்கறிஞர் புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.