நேஷனல் ஃபிலிம் அகாடமி சார்பில் பத்தாவது சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் எனும் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கு பற்றிய ‘கேப்டன் மில்லர்’ எனும் திரைப்படம் தெரிவு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.
நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘கேப்டன் மில்லர்’ எனும் திரைப்படம்- இங்கிலாந்து நாட்டின் லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி சார்பில் வழங்கப்படும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான விருதினை வென்றிருக்கிறது.
இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் தனுஷுடன் இணைந்து நடித்த நிலையில் படம் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருந்து. கேப்டன் மில்லர் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி படமாக அமைந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்+ செந்தில் தியாகராஜன்+ அர்ஜுன் தியாகராஜன் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன் ஆகியோர் நடிப்பில் தயாரான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா தினத்தை முன்னிட்டு பட மாளிகையில் வெளியானது என்பதும், கலவையான விமர்சனங்களை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வழங்கும் விழாவில் நேரில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளர் விருதினை பெற்றுக் கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் பல குழுவினருக்கு அவர் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.