டொமினிக்கா விண்ட்சர் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வினின் 10 விக்கெட் குவியல் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.
அஷ்வினின் துல்லியமான பந்துவீச்சுடன் 21 வயதான இளம் அறிமுக வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் குவித்த கன்னிச் சதமும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்களிப்பு செய்திருந்தது.
ஜய்ஸ்வால் அனுபவசாலி போல் அற்புதமாக துடுப்பெடுத்தாடி கன்னிச் சதத்தை பூர்த்தி செய்தார்.
387 பந்துகளை எதிர்கொண்ட ஜய்ஸ்வால் 16 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 171 ஓட்டங்களைக் குவித்து இந்தியாவை பலப்படுத்தியிருந்தார்.
இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது மேற்கிந்தியத் தீவுகள் 9 விக்கெட்களை இழந்திருந்ததால் போட்டியில் ஒரு முடிவை எட்டும் வகையில் 30 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டது. ஆனால், 11 நிமிடங்களுக்குள் கடைசி விக்கெட் வீழ்த்தப்பட முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களில் நிறைவுக்கு வந்தது.
அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 115 ஓவர்களே தாக்குப்பிடிக்க முடிந்தது.
இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 – 25 பருவத்துக்கான முதலாவது வெற்றிப் புள்ளிகளை இந்தியா சம்பாதித்துக்கொண்டது.
கடந்த புதன்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் எதிரணியின் சுழல்பந்துவீச்சுகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 50.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளை பெற்ற போதிலும், இருவர் மாத்திரமே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
அஷ்வின் 5 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 3ஆம் நாள் ஆட்டத்தில் மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் 5 விக்கெட் இழப்புக்கு 421 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
ஜய்ஸ்வாலும் ரோஹித் ஷர்மாவும் முதலாவது விக்கெட்டில் 229 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஆரம்ப ஜோடியினரால் பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். அத்துடன் மேற்கிற்தியத் தீவுகளுக்கு எதிராக சகல விக்கெட்களுக்குமான இந்தியாவின் 4ஆவது அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.
ரோஹித் ஷர்மா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 10ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். விராத் கோஹ்லி 29ஆவது அரைச் சதத்தைப் பெற்றதுடன் ஜய்ஸ்வாலுடன் 3ஆவது விக்கெட்டில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 271 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் அஷ்வினின் பந்துவீச்சில் சிக்கி 50.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட் குவியல்களை பதிவுசெய்த அஷ்வின் இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 34 தடவைகள் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ளார்.
இப்போட்டியில் 131 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்களை அஷ்வின் வீழ்த்தினார்.
அஷ்வினுக்கு 500 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்வதற்கு இன்னும் 14 விக்கெட்கள் தேவைப்படுகிறது.
எண்ணிக்கை சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 150 (அலிக் அத்தேன்ஸ் 47, க்ரெய்க் ப்றத்வெய்ட் 20, ரவிச்சந்திரன் அஷ்வின் 60 – 5 விக்., ரவிந்த்ர ஜடேஜா 26 – 3 விக்.)
இந்தியா 1ஆவது இன்: 421 – 5 விக். டிக்ளயார்ட் (யஷஸ்வி ஜய்ஸ்வால் 171, ரோஹித் ஷர்மா 103, விராத் கோஹ்லி 76, ரவிந்த்ர ஜடேஜா 37 ஆ.இ., ரக்கீம் கோர்ன்வோல் 32 – 1 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: 130 (அலிக் அல்தேன்ஸ் 28, ஜேசன் ஹோல்டர் 20 ஆ.இ., ரவிச்சந்திரன் அஷ்வின் 71 – 7 விக்., ரவிந்த்ர ஜடேஜா 38 – 2 விக்.)