தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்த சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (21.07.2023 ) அன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்தவர் , தனது தங்க சங்கிலி மற்றும் தாலிக்கொடி என்பவற்றை தங்கையிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார்.
வெளியே புறப்படுவதற்காக , தான் கொடுத்த நகைகளை தருமாறு தங்கையிடம் கோரியுள்ளார். தங்கை தாலிக்கொடியை மட்டும் கொடுத்துள்ளார். தான், தங்கச் சங்கிலி மற்றும் தாலிக்கொடி இரண்டையும் தந்ததாக கூறி சங்கிலியையும் தருமாறு அக்கா கேட்டுள்ளார். தன்னிடம் தாலிக்கொடி மட்டுமே தந்ததாக தங்கை வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கா , தனது தங்கையின் நீளமான தலைமுடியினை கத்தரித்துள்ளார். தனது தலைமுடி போய் விட்டது என்ற கவலையில் கனடாவிலிருந்து அக்காவை கைது செய்யுமாறு தங்கை வெட்டப்பட்ட முடியுடன் சென்று புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பிரகாரம் பொலிஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.