இந்தியாவிற்கு சென்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் இந்தியாவின் சென்னை நகரில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை பாரிமுனையில் பணத் தகராறில் இலங்கை வியாபாரியை கடத்திய சந்தேகத்தின் பேரில் 4 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனா். இலங்கையைச் சோ்ந்தவா் வியாபாரியான முகம்மது ஷியாம் என்பவர், தொழில் நிமித்தமாக அண்மையில் சென்னை சென்றிருந்தார்.
பாரிமுனையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை, ஒரு கும்பல் கடத்தியது. மேலும், அந்தக் கும்பல் இலங்கையில் இருக்கும் அவரது மகளை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு முகம்மது ஷியாமை விடுவிக்க 15 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளது.
இது குறித்து அவா், வடக்கு கடற்கரை பொலிஸ் நிலையத்தில் இணையம் மூலமாக முறைப்பாடளித்தாா். அதன்பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.
சம்பவத்தில் ஈடுபட்டது அண்ணா நகா் 10-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த கி.சித்ரா (43), மு.ரியாஸ் அஸ்கா் (47), மேற்கு கே.கே.நகா் வன்னியா் தெருவைச் சோ்ந்த கோ.வேல்முருகன் (41), கா.தினேஷ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரையும் பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்து, முகம்மது ஷியாமை மீட்டனா்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட சித்ராவிடம் முகம்மது ஷியாம் கடன் வாங்கியிருப்பதும், வாங்கிய கடனைத் திருப்பி அளிக்காததால் சித்ரா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடா்பாக பொலிஸார் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.