இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக இந்தியா – அமெரிக்கா கூட்டணி, அந்நாட்டில் அதானி குழுமம் கட்டும் புதிய துறைமுகத்திற்கு அமெரிக்கா சுமார் 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இலங்கை பொருளாதாரம் திவாலான பின்பு எரிபொருள் முதல் உணவு பொருட்கள் வரையில் இந்தியாவும், தமிழ்நாடும் கொடுத்து உதவியது. இந்த நிலையில் அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கி பல வளர்ச்சி திட்டங்களைக் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கைப்பற்றியது. இந்த நிலையில் கௌதம் அதானி-க்கு இலங்கை திட்டத்தில் ஜாக்பாட் அடித்துள்ளது. இதனால் அதானி குழுமம் மீது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது. ஏற்கனவே இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் சமீபத்தில் சீன கப்பல்களும் இலங்கைத் துறைமுகத்திற்கு வந்து சென்றது.
இலங்கை தலைநகரான கொழும்பில் அதானி குழுமம் டீப்வாட்டர் வெஸ்ட் கண்டைனர் டெர்மினல் கட்டுமான திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேளையில் இத்திட்டத்திற்கு 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியை சர்வதேச வளர்ச்சி நிதியியல் அமைப்பு வாயிலாக அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அதானி கிரீன் நிறுவனம் இலங்கையின் மின்சாரத் துறையில் சுமார் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை செய்ய உள்ளதாகக் கரண் அதானி தெரிவித்தார். இதன் மூலம் அதானி கிரீன் வர்த்தகம் வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் அடைந்து பல புதிய வாய்ப்புகளும், அதிக வருமானமும் கிடைக்கும். அதானி கிரீன் நிறுவனத்தின் முதலீட்டு வாயிலாக இலங்கையின் மின்சார உள்கட்டமைப்பு பெரிய அளவில் மேம்படுவது மட்டும் அல்லாமல் நிலையான மற்றும் கிரீன் எனர்ஜி கட்டமைப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. அதானி குழுமம் இலங்கை துறைமுகத்தில் 2026 வரையில் சுமார் 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.