இலங்கை சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையிலேயே மொஹான் பீரிஸ் கீழ்கண்டவாறு தெரிவித்தார்.2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்மொழிக்கொள்கை நிறைவேற்றப்பட்டதுடன், அண்மையில் அரசசேவை ஊழியர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பேசுவதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் அனைத்து விதமான இனவெறி மற்றும் ஒடுக்குமுறை செயற்பாடுகளும் மனித உரிமைகளுக்குத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதேபோன்று அவற்றுக்கு எதிரான எமது நிலைப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றோம். இனவெறி, இனரீதியான ஒடுக்குமுறைகள், அந்நிய வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றின் அனைத்து வடிவங்களையும் முழுமையாக இல்லாதொழிப்பதும், அதனை உறுதியாகப் பின்பற்றுவதும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும். அதற்கு தனிநபர்கள், சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரதும் கூட்டிணைந்த முயற்சி அவசியமாகும்
இனவெறியையும், ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதில் கல்வியும், மக்கள் மத்தியிலான விழிப்புணர்வும் மிகமுக்கிய பங்குவகிக்கின்றன.சகிப்புத்தன்மை மற்றும் கருணையை மேம்படுத்துவதும், கல்வியின் மூலமான புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வதும் முன்கற்பிதங்களையும் தவறான கருத்தியல்களையும் சவாலுக்கு உட்படுத்துவதற்கு உதவும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கட்டமைப்புக்களில் இனவாதமற்ற பாடத்திட்டங்களின் மூலமும், கருத்தாடல் மற்றும் புரிதலுக்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலமும் இவற்றைத் தோற்கடிக்கமுடியும்.
தனிநபர்களின் சமத்துவ உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு சட்டங்களும், கொள்கைகளும் இன்றியமையாதனவாகும். ஒடுக்குமுறைகளைத் தடுக்கக்கூடியதும், பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதி கோரக்கூடியதுமான சட்டங்களை அரசாங்கம் உருவாக்கவேண்டும்.
வேலைவாய்ப்பு, வீடமைப்பு, அரசசேவை என சமூகத்தின் அனைத்துக் கட்டமைப்புக்களிலும் பல்லினத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும், கலாசாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதும் இனவெறி மற்றும் ஒடுக்குமுறைகளைத் தோற்கடிப்பதற்கு மிக அவசியமாகும்.
சுயகௌரவம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றில் அனைத்துப் பிரஜைகளும் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துடனேயே பிறந்தனர் என்பதை இலங்கை மீளவலியுறுத்துகின்றது.
இலங்கை அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரம், ‘இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் நிலைப்பாடு, பிறந்த இடம் உள்ளிட்ட புறக்காரணிகளின் அடிப்படையில் எந்தவொரு பிரஜையும் ஒடுக்கப்படக்கூடாது’ என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை அனைத்துப் பிரஜைகளும் அவர்கள் வாழும் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கக்கூடிய உரிமையையும், இயலுமையையும் கொண்டிருப்பதாக நாம் நம்புகின்றோம்.பல்லின, பன்மத, பல்கலாசார நாடான இலங்கை இதனை முன்னிறுத்தி அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.