ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கௌரவத் தோற்றத்தில் சுப்பர் ஸ்டார் நடித்திருக்கும் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர் சி.யின் அரண்மனை 4 மற்றும் தனுஷின் கெப்டன் மில்லர் ஆகிய படங்களுடன் மேலும் சில படங்களும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கின்றன.
பொங்கல் போட்டிக்கு ஏற்கனவே தமிழ்த் திரைப்படங்கள் பல வரிசை கட்டிக் காத்திருக்கும் நிலையில், விஜய் சேதுபதி – கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ படமும் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சேதுபதி தென்னக திரைப்படங்கள் மட்டுமன்றி பாலிவுட்டின் சினிமா மற்றும் ஓடிடி வலைத்தொடர்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் அமேசான் பிரைமில் வெளியான ’ஃபார்ஸி’ தொடர் விஜய் சேதுபதியை ஓடிடி தளத்தில் அடியெடுக்க செய்தது.
மேலும் சினிமாவில் துவண்டிருந்த இந்தி நடிகர் ஷாகித் கபூருக்கும் இந்த வலைத்தொடர் திருப்பு முனையானது. தற்போது ஐஎம்டிபி தளத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட இந்திய வலைத்தொடராக ஃபார்ஸி இடம்பெற்றுள்ளது. மேலும், ஷாருக்கானின் ஜவான் வாயிலாக பாலிவுட்டில் காலடி வைத்த விஜய் சேதுபதியின் அடுத்த படமாக மெரி கிறிஸ்துமஸ்ஸ் வெளியாக இருக்கிறது.
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை, தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.
பதல்பூர் மற்றும் அந்தாதூன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.