ஆளுநர் பதவி அக்கற்றப்பட வேண்டிய பதவி தமிழகமுதல்வர் ஸ்டாலின்
தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) காலை கூடியது. அவை கூடியவுடன் சபாநாயகர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை வாசிக்க அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். அப்போது பேசிய முதல்வர், “எனது உடல் நலனைவிட மாநில மக்களின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. இது தொடர்பாக சட்ட ரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.
ஆனால் ஆளுநர் ரவி தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளால், சட்டமுன் வடிவுகளை திருப்பி அனுப்பியிருப்பது, தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவர் அவமதிக்கிறார் எனப் பொருள். இது சட்டவிரோதம், மக்கள் விரோதம், ஜனநாயக விரோதம், மனசாட்சி விரோதம், அதையும்விட சட்டமன்றத்தின் இறையான்மைக்கு எதிரானது.
மத்திய அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை தமிழக அரசால் செயல்படுத்த முடியும். மத்திய அரசிடம் ஆளுநருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர் தமிழ்நாட்டுக்கான நிதியை பெற்றுத்தர முயற்சிக்கலாம். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை பெற்றுத் தரலாம். புதிய ரயில்வே திட்டங்களைப் பெற்று தரலாம். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருக்கலாம். ஆனால் இதில் எதையும் செய்யாமல் மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.
விழாக்களுக்கு செல்கிறார்.செல்லட்டும் ஆனால் விதண்டாவாதமாக கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொது வழியில் விளக்கம் அளிப்பதும், விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு கிடையாது, தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிட கொள்கை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரின் அபத்தமான கருத்துக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மறுப்பு செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.தமிழ்நாடு வளர்ந்து வருவதை காண பொறுக்காமல் ஆளுநர் இத்தகைய செயல்களை செய்து வருவதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்திற்கு முழுவதும் மாறாக ஆளுநர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். எனவே அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு இந்திய குடியரசு தலைவர் அவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி இருக்கிறார்கள். நானும் இந்திய பிரதமருக்கு இந்த பிரச்சினை குறித்து கடிதம் எழுதி இருக்கிறேன். இந்த அனைத்து முயற்சிகளும் எந்தவித பயனும் தராததால்தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் கட்சி கதவுகளை தட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்,
முதல்வர் பேசியதை அடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை விமர்சிக்காமல், தனிப்பட்ட விமர்சனங்களைக் கூறாமல் தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பினர் களுக்கு அனுமதியளித்தார்.