.
மிக்ஜாம் புயலின் போது பெய்த மழை 47 ஆண்டுகளில் இல்லாத மழை என்று தமிழக அரசு கூறியது. இந்திய வானிலை ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்டிருந்த தரவுகளின் படி, ஒரு நாளில் பெய்த மழை அளவு 2023-ஐ விட 2015-ஆம் ஆண்டே அதிகமாக இருப்பதாக கூறுகிறது.2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகின்றன
இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் அனைத்தும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரங்களில் மழை எவ்வளவு பெய்துள்ளது என்பதைக் கணக்கிடுகிறது. அதன் படி, 2015-ஆம் ஆண்டு அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழை பதிவாகியது அதே முறையில் கணக்கிடும் போது, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜம் புயல் தாக்கிய நாளில் சென்னையில் 23 செ.மீ மழை பதிவாகியது.
பெரு மழை பெய்த நாட்களுக்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் எவ்வளவு மழை பெய்தன என்ற தரவுகள் உள்ளன. 2015-ஆம் ஆண்டில், டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.
அதே போன்று 2023-ஆம் ஆண்டில் டிசம்பர் 3-ஆம் தேதி 6.2 செ.மீ மழையும், டிசம்பர் 5ம் தேதி 23.8 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் மொத்தம் 53.1 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.புயல், மழை வெள்ளம் ஆகியவற்றை பற்றி ஒப்பிட்டு பேசும்போது, மழை அளவு தரவுகளை தவிர மற்றும் வேறு சில அம்சங்களும் உள்ளன.
“கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால். 2015-இல் புயல் ஏதும் உருவாகவில்லை. கிழக்கிலிருந்து காற்றாழுத்த தாழ்வு நிலை உருவானது. 2023-இல் மழை தொடங்கிய டிசம்பர் 3-ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 8.30 மணி வரையிலான 24 மணி நேரங்களில் 40 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த அளவுக்கான தீவிர மழை 2015-ல் பெய்யவில்லை,” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ் கூறும்போது ஒவ்வொரு புயலும் தனித்துவமானது, அவற்றை ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாது என்கிறார் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் முன்னாள் பேராசிரியரும் நீர் குறித்த விரிவான பல ஆய்வுகளை நடத்தி வரும் எஸ். ஜனகராஜ். 2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல்படுகையில் தான் அதிக மழை பெய்தது. அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. சென்னையின் தென் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம், அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தான். அதற்கு காரணம் செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டது ஆகும்,” என்றார்.
2015-ஆம் ஆண்டில் 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. ஏரி உடைந்துவிடும் ஆபத்து இருந்ததால் ஒரே நேரத்தில் 29,400 கன அடி நீர் செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் திடீரென 29,000 கன அடி திறக்கப்பட்டது, நிலைமையை மோசமாக்கியது. அடையாற்றின் கரை ஓரங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் புயலினால் பெய்த மழை காராணமாகவே ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் மிக நீண்ட நேரம் நிலை கொண்டு இருந்ததன் காரணமாக அதி கனமழை தொடர்ந்து பெய்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் சென்னைக்கு மிக நெருக்கமாக வெறும் 90 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருந்தது. மணிக்கு 10 – 18 கி.மீ. வேகத்தில் செல்லும் புயல் வெறும் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது அதன் வேகம் மேலும் குறைந்து மணிக்கு 5 கி.மீ. என்று இருந்தபோது புயல் கிட்டத்தட்ட சென்னைக்கு அருகிலேயே ஸ்தம்பித்து நிற்பது போல் ஆனது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ், “மிக்ஜாம் புயல் 16 முதல் 18 மணி நேரங்கள் சென்னைக்கு அருகிலான கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்தது. புயலின் மைய பகுதி, சென்னையிலிருந்து 80-90 கி.மீ அருகில் இருந்தது. ஆனால், புயலின் வெளிப்புற பகுதியில் தான் தீவிர காற்றும் மேகங்களும் இருக்கும். அந்த பகுதி சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இருந்தது. அதனால் தான் மழை தீவிரமாக பெய்தது,” என்றார்.
மிக்ஜாம் புயல் எப்போது உருவாகும், புயலின் பாதை என்னவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கூறியிருந்தாலும், புயல் இவ்வளவு நேரம் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருக்கும் என்பது யாரும் எதிர்ப்பார்க்காதது.மிக்ஜாம் புயல் சென்னை கரைக்கு மிக அருகில் வந்து, சென்னையை உரசி உரசி சென்று மேலும் வடக்கு நோக்கி நகர்ந்தது.1976-ஆம் ஆண்டு உருவான புயலின் பாதையும் இதுவாகவே இருந்தது என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ்.
“சென்னையில் அதிக அளவிலான வெள்ளத்தை முதல் முறையாக ஏற்படுத்தியது அந்த புயல். மிக்ஜாம் புயல் கடந்து சென்ற அதே பாதையில் சென்றது, ஆனால் மிக்ஜாம் போல வடக்கு நோக்கி செல்லவில்லை. அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் 24 மணி நேரத்தில் 45 செ.மீ மழை பதிவானது. இப்போதும், இதுவே 24 மணி நேரங்களில் சென்னையில் பதிவான அதிகபட்ச மழையாகும்,” என்றார்.மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் முன்னாள் பேராசிரியர் எஸ். ஜனகராஜ், “1976-க்கு பிறகு, சென்னையில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தது இதுவே முதல் முறையாகும். எனவே 47 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை இது என கூறலாம். ஆனால், மழையின் தாக்கம் 1976-ஐ விட இப்போது தான் அதிகமாக உள்ளது. இப்போது, நீர் வழிப்பாதைகள், ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பூமியின் உள் செல்வதற்கான நிலம் குறைந்துக் கொண்டே வருகிறது. பெய்யும் மழையில் 95% ஆறுகளில், கடல்களில் கலக்கிறது,” என்றார். 2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகின்றனர்.