இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
மிசோரம் மாநிலம் – சாய்ராங் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மிசோரம் தலைநகர் Aizawl-இல் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாய்ரங் பகுதியில் இன்று (23) காலை 11 மணிக்கு மேம்பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
விபத்து நடந்த போது அங்கு 40 தொழிலாளர்கள் பாலத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே, மிசேராம் முதல்வர் Zoramthanga விபத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
இந்த பாலம் பைராபி மற்றும் சாய்ராங் இரயில் நிலையங்களுக்கு இடையே குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் Aizawl தேசிய ரயில் பாதைகளுடன் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.