யுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் ,தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா நேற்று திங்கட்கிழமை (17.07.2023) யாழ் அராலியில் கொண்டாடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில் , “இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலில் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை, இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கென கலை பண்பாட்டுக் கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது. போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்பாடு குறித்த உணர்வுபூர்வமான பிரக்ஞை மக்களிடமும் ஏற்படுத்தப்பட்டது. தென்னிலங்கையிலும் தமிழ் சிங்கள கலைக்கூடல் முன்னெடுக்கப்பட்டது.
ஆடிப்பிறப்பு தமிழ் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு பண்டிகை. பன்மைத்துவம் மிக்க ஆரோக்கிய உணவைக் கூடிப்பகிர்ந்துண்ணும் உணவுப் பண்பாட்டை எடுத்தியம்புகின்ற ஆடிப்பிறப்பு நாளில் பாடசாலைகளில் விடுமுறை வழங்கிய காலம் ஒன்றிருந்தது. ஆனால் இன்று “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” என்று பாடிய சோமசுந்தரப் புலவரின் பாடல் மாத்திரம்தான் மிஞ்சியுள்ளது.
பண்பாட்டுச் செயற்பாடுகளுக்காகத் தனியார்கல்வி நிறுவனங்களிடம் விடுமுறையைக் கோருகின்ற நாம் பாடசாலைகளில் ஆடிப்பிறப்புக்கான விடுமுறையை மீளப் பெறுவதற்கும் முன்வரவேண்டும். சிங்களபௌத்த மேலாதிக்கத்தினாலும் உலகமயமாக்கலினாலும் ஒருபுறம் தமிழ்ப் பண்பாடு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .
இன்னொருபுறம் தமிழ் மக்களினது உதாசீனத்தாலும் தமிழ்ப் பண்பாடு அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேடைகளில் தமிழ்த் தேசியம் குறித்து முழங்கும் எங்களது அரசியல் கட்சிகள் எதுவும் தேசியத்தில் பண்பாட்டின் வகிபாகம் குறித்துக் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. பண்பாட்டை உள்வாங்காத தேசியம் , ஒருபோதும் முழுமை பெறாது.
தேசியம் பற்றி அரசியல்வாதிகள் அதிகம் பேசினாலும் அது மக்களிடம்தான் உள்ளது. மக்களே அதனை அடைகாக்கிறார்கள். ஓர் இனத்தை மற்றைய இனங்களிடமிருந்து வேறுபிரித்துக்காட்டும் தனித்துவமான வாழ்வியல் முறைமையே தேசியமாகும் .
இதில் முள்ளெலும்பு போன்று பண்பாடு வகிக்கும் பாத்திரம் பிரதானமானது. இதனாலேயே ஓர் இனத்தை அழிக்க நினைப்பவர்கள் முதலில் பண்பாட்டைச் சிதைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இதனை எதிர்கொள்வதற்கு நாம் கலை இலக்கிய , பண்பாட்டுச் செயற்பாடுகளை அரசியலுடன் சேர்த்து ஓர் பேரியக்கமாக முன்னெடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.