தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையைத் தெரிவு செய்வதற்கு தேர்தலை நடத்துவதா இல்லை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பிரதாய அடிப்படையில் ஒருவரை ஏகமனதாக நியமிப்பதா என்று தீர்மானிக்கப்படவுள்ளது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம் கொழும்பில் உள்ள அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (10) பிற்பகல் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. மூன்று தலைமை வேட்பாளர்களுக்கும் இடையில் இணக்கம் காணப்படாது விட்டால் திட்டமிட்டபடி எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தல் அடிப்படையில் புதிய தலைமை தெரிவாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து மாநாடு 27,28ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு அமைவாக, தலைமைப்பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யேகேஸ்வரன் ஆகியோர் கூடிப்பேசுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதோடு ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டக்கிளை மற்றும் மூலக்கிளை தெரிவுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்திலிருந்து பொதுச்சபையில் வாக்களிப்பதற்கு அறுவரை பெயரிடுவதற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இரா.சம்பந்தனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன்,வடமாகாண தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம், நிருவாகச் செயலாளர் குலநாயகம், பொருளாளர் கனகசபாபதி, கொழும்புக்கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் செயலாளர் துரைராஜசிங்கம், ஒழுக்காற்றுக்குழுத் தலைவர் சீனித்தம்பி யோகேஸ்வரன், திருமலை மாவட்டக்கிளைத் தலைவர் குகதாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், குறித்த கூட்டத்தின் போது, முதலில் திருகோணமலை மாவட்டக்கிளைத் தெரிவு சம்பந்தமான குழப்பநிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.சம்பந்தன் ஆரம்பம் முதலே, திருகோணமலை மாவட்டக்கிளைத் தெரிவில் காணப்படுகின்ற அதிருப்தி நிலைமைகள் தீர்க்கப்பட வேண்டும்.
தற்போது இடம்பெற்ற தெரிவுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் மீள் தெரிவு சுயாதீனக்குழு முன்னிலையில் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் மாநாட்டை நடத்த முடியும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டார். அத்துடன் திருமலை மாவட்டக்கிளைத் தெரிவு தொடர்பில் அதிருப்தியாளர்கள் நீதிமன்றத்தினை நாடினால் நிலைமைகள் மோசமடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அச்சமயத்தில் சுமந்திரன் அவ்வாறு நீதிமன்றத்தினை அதிருப்தி உறுப்பினர்களில் யராவது நாடினால் அந்தவழக்கினை கட்சி என்ற அடிப்படையில் முகங்கொடுப்போம் என்று பதிலளித்தார்.
இதனையடுத்து, அதிருப்தி உறுப்பினர்களின் விடயத்திற்கு எவ்விதமான தீர்வு வழங்குவது என்பது பற்றி ஆராயப்பட்டது.
அதனடிப்படையில், குறித்த அதிருப்தி வெளியிட்டவர்களில் அறுவரை மாவட்டக்கிளை சார்பில் பொதுச்சபையில் வாக்களிப்பதற்கான உரித்தை வழங்கும் வகையில் பெயரிடுவதற்கு அனுமதி அளிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
எனினும், அவர்களில் யார் அந்த அந்தஸ்தைப்பெறுவார்கள் என்பதை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இரா.சம்பந்தனே பெயரிடுவதற்கு அரசியல் குழு ஏகமனதாக அனுமதி அளித்துள்ளது.
அதற்கு அமைவாக, சம்பந்தன் குறித்த அறுவரின் பெயர்களையும் நாளையதினம் நிறைவடைவதற்குள் தலைமைக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனையடுத்து, எதிர்வரும் 21ஆம் திகதி கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு தொடர்பில் பேசப்பட்டது.
இந்த விடயம் சம்பந்தமாக, சம்பந்தன், மாவை, தவராசா,கனகசபாபதி, உள்ளிட்டவர்கள் கட்சியின் கடந்த காலச் சம்பிரதாயத்துக்கு அமைவாக இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமை தெரிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
ஆவ்விதமான நிலைமையே கட்சிக்குள் தேவையில்லாத பிளவுகள் ஏற்படுவது தவிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தனது. அதற்கு அமைவாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறினார்கள்.
எனினும், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் எவ்விதமான பதில்களையும் வழங்காத நிலையில், சுமந்திரன் தலைமைக்கான தேர்தல் போட்டிக் செல்வதால்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. நான் வெற்றிபெறுபவருடன் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் கட்சியின் யாப்பில் தேர்தல் மூலம் புதிய தலைமை தெரிவு செய்யப்படுவதற்கு ஏதுவான ஏற்பாடுகள் தெளிவாக உள்ளன. குறிப்பாக கட்சியின் முதலாவது யாப்பிலிருந்தே அவ்விதமான நிலைமைகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும், தொடர்ச்சியாக மேற்படி உறுப்பினர்கள் தேர்தலற்ற வகையில் தலைமைத்தெரிவு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
இதனையடுத்து நீண்டவாதப்பிரதிவாதங்கள் உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்றதோடு ஈற்றில், வேட்பாளர்கள் மூவரும் தமக்குள் பிரத்தியேகமாக கூடிப்பேசி தீர்மானமொன்றை அறிவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதற்கமைவாக, அவர்களுக்கு ஒரு நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய தலைமைக்கான வேட்பாளர்களுக்கு இடையிலான சந்திப்பானது இன்றையதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது மூவரும் கூட்டிணைந்து எடுக்கும் தீர்மானம் கட்சித் தலைமைக்கும் அரசியல் குழுவிற்கும் அறிவிக்கப்படும்.