உலக நாடுகளைப் போல இலங்கையிலும் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளனர்.
இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கூட்டமைப்பினர், மற்றும் டிரான் அலஸிற்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இந்தியா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளில் காவல்துறை அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், அமைச்சர் டிரான் அலஸுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிக்காததன் காரணமாக வடக்கில் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாதிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல சர்வதேச நாடுகளில் காவல்துறை அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் குறித்த சட்டம் திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட வேண்டுமென கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
அனால் , இந்தியா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் உள்ள அரசியல் கலாசாரங்கள் இலங்கையில் இல்லையென இந்த சந்திப்பின் போது டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கோருவதற்கான காரணத்தையும் இந்தச் சந்திப்பின் போது இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.