இளம் வீரர் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அபாரமான சதத்தால் டோமினிக்காவில் நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்துள்ளது.
2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
ஜெய்ஸ்வால் சாதனை சதம்
அறிமுக ஆட்டத்திலேயே தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்த 3வது இந்திய பேட்டர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். இதற்கு முன் பிரித்வி ஷா, ஷிகர் தவண் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தத்தில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த 17-வது இந்திய பேட்டராக ஜெய்ஸ்வால் இடம் பெற்றார்.
இந்தியாவுக்கு வெளியே அறிமுகப் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பேட்டராக செளரவ் கங்குலி இருந்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி அடித்த 131 ரன்கள்தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜெய்ஸ்வால் 27 ஆண்டுகளுக்குப்பின் முறியடித்து, 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். ஆசியாவுக்கு வெளியே கங்குலிக்கு அடுத்தபடியாக, அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்த வீரராக ஜெய்ஸ்வால் இடம் பெற்றார்.
ஜெய்ஸ்வால் 2வது நாள் ஆட்ட இறுதிவரை 350 பந்துகளைச் சந்தித்து 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அறிமுக டெஸ்ட் போட்டியில் ஒரு இந்திய பேட்டர் இந்த அளவு அதிகமான பந்துகளைச் சந்தித்தது இதுதான் முதல்முறையாகும்.இதற்கு முன் கடந்த 1984ம் ஆண்டில், ஈடன் கார்டனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசாருதீன் அறிமுக ஆட்டத்தில் 322 பந்துகளைச் சந்தித்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதையும் ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டார்.
ரோஹித், ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதாவது, விக்கெட் இழப்பின்றி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 79 ரன்கள் முன்னிலை பெற்றபின் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்தியா முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி, முன்னிலை பெற்றதும் இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் கடந்த 1978ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுனில் கவாஸ்கர், சவுகான் இருவரும் முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டனர்.
அது மட்டுமல்லாமல் ஆசியக் கண்டத்துக்கு வெளியே, இந்திய அணியின் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் கடந்த 1979ம் ஆண்டு ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர், சவுகான் ஜோடி 213 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தொடக்க ஜோடி
இந்தியாவுக்கு வெளியே சேர்த்த 3வது அதிகபட்சமாக இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுவாக அமைந்தது. இதற்கு முன் கடந்த 2002 வான்ஹடேவில் நடந்த டெஸ்டில் சேவாக், சஞ்சய் பங்கர் ஜோடி 201 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்து.
வணக்கம்