போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தக்காளியால் கணவரை பிரிந்த மனைவி தற்போது வீடு திரும்பியுள்ளார்.
மத்திய பிரதேசம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். இவர் தனக்கு சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் அண்மையில் தனது மனைவியை கேட்காமல் இரு தக்காளிகளை கூடுதலாக பயன்படுத்தி சமைத்துவிட்டார்.
இதனால் கணவனுடன் மனைவி சண்டையிட்டுள்ளார். தக்காளி விலை குறைவாக இருந்தால் கூட எக்ஸ்ட்ரா போடலாம். ஆனால் அதன் விலையோ அன்றாடம் உயர்ந்து கொண்டே வருகிறது. அப்படியிருக்கும் போது எதற்காக இரு தக்காளிகளை கூடுதலாக போட்டு சமைத்தீர்கள் என கேட்டு மனைவி சண்டையிட்டார்.
இதையடுத்து இந்த வாக்குவாதத்தில் தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதுகுறித்து சஞ்சீவ் புர்மன் கூறுகையில் சமையலின்போது 2 தக்காளிகளை கூடுதலாக பயன்படுத்தியதால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் என் மகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சும்மா அப்படி போய்ட்டு இப்படி வந்துவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர் வீட்டு்கு வரவில்லை. அவர்களை எல்லா இடங்களிலும் தேடிய பிறகும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளேன். 3 நாட்களாக என் மனைவி என்னிடம் பேசவில்லை. அவர் எங்கு போயிருக்கிறார் என்றும் தெரியவில்லை என்றார். இநத நிலையில் புகாரின் பேரில் புர்மனின் மனைவியை தேடிய போலீஸார் அவர் தனது சகோதரியின் வீட்டில் இருப்பதை அறிந்து அவரை அழைத்து வந்து கணவருடன் சேர்த்து வைத்தனர். இதனால் புர்மன் மகிழ்ச்சி அடைந்தார். தமிழகத்தில் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளியின் விலை அதிகமாகவே இருக்கிறது.
கிலோவுக்கு ரூ 120 முதல் ரூ 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளியின விலை கிலோவுக்கு ரூ 60 முதல் 80 வரை விற்பனையாகிறது. தக்காளியை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.