இலங்கையில் 2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ் அமைப்பினர் மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனரா என்பது பற்றி துரித விசாரணைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு, பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் கடந்த வியாழக்கிழமை (24) கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
கடந்த புதன் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குகள் தொடர்பிலான விவாதத்தின் போது எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிகள் பெற்ற 25 பேர் நாட்டிற்குள் இருக்கிறார்களா? என்கின்ற விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
ஐ.எஸ். (IS) அமைப்பினர் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் குறித்த கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
மேற்படி பாராளுமன்ற அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரையின் உண்மைத்தன்மை பற்றி முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கடந்த காலங்களைப்போன்று உரிய தகவல் கிடைத்தும் உடனடி நடவடிக்கைகள் எடுக்காமையினால் ஏற்பட்ட விபரீதங்கள் பற்றியும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமாறு இக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது சந்தேகம் ஏற்பட காரணம் யாது?