சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அதிதி, மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
’மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற நிலையில், இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனும், தனது முந்தைய படமான ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்வியைக் குறிப்பிட்டு, “இந்த முறை மிஸ்ஸே ஆகாது” எனத் தெரிவித்தார்.
மாவீரன் திரைக்கதை எப்படி?
‘மாவீரன்’ திரைப்படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு சமரசத்துடன் வாழும் ஒருவனின் வாழ்க்கையை எங்கிருந்தோ கேட்கும் ‘அசரீரீ ஒலி’ மாற்றியமைத்து மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்க வைத்தால் அதுவே ‘மாவீரன்’ ஒன்லைன் எனக் குறிப்பிட்டு இந்து தமிழ் திசை விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
கார்ட்டூனிஸ்ட்டான சத்யா (சிவகார்த்திகேயன்) தனது அம்மா, தங்கையுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். திடீரென ஒருநாள் அரசு சார்பில் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி அறிவிப்பு வருகிறது.
மேலும், அந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதாகக் கூறி, அடுக்குமாடி குடியிருப்புக்கு இடமாற்றம் செய்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று மோசமான நிலையில் இருப்பதை எதிர்த்து முறையிடும் தன் தாயிடம் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கோம்மா’ என சமரசம் செய்கிறார் பயந்த சுபாவம் கொண்ட சத்யா.
இதன் நீட்சியாக தனது குடும்பத்துக்கு மற்றொரு பாதிப்பு நேரும்போதும்கூட, அதையும் தட்டிக்கேட்க முடியாமல் தன்னையே நொந்துகொள்ளும் அவர் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது நேரும் விபத்தில் அவர் வரைந்த கார்டூன் கதாபாத்திரத்தின் குரல் ஒன்று அசரீரீயாய் ஒலிக்கிறது.
அந்தக் குரல் கோழையான சத்யாவை எப்படி ‘மாவீரன்’ஆக மாற்றுகிறது என்பதே படத்தின் திரைக்கதை என இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும், “பெருநகர விரிவாக்கம், வளர்ச்சி என்ற பெயரில் குடிசைப் பகுதி மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களுக்கு அந்நியமான புறநகர் பகுதிகளுக்குத் தூக்கி அடிக்கும் அரசின்
அவலப்போக்கை கருவாக எடுத்து அதை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின்.
‘மண்டேலா’ படத்தைப் போல இந்தப் படத்திலும் அவரது சமூகப் பொறுப்பு கவனிக்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கருவை ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமாவாக மாற்ற எழுதியிருக்கும் முற்பகுதி திரைக்கதை ரசிக்க வைக்கிறது,” என்று இந்து தமிழ் விமர்சனம் கூறுகிறது.
நாயகனுக்கு பில்டப் அதிகமா?
கதைக்களத்தின் சுவாரஸ்யத்திற்கு மிக முக்கியமான காரணம் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கான படிப்படியான உருமாற்றமும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரும். கூடவே யோகி பாபுவின் டைமிங் காமெடிகள் நிறைய இடங்களில் கைகொடுப்பது படத்திற்கு பலம் என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, “அமைச்சரான மிஷ்கினை சாமானியனான சிவகார்த்திகேயன் தனது அப்பாவித்தனங்களுடன் எதிர்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
அதுவரை பயந்த சுபாவம் கொண்ட நாயகன் கதாபாத்திரத்தை மாவீரனாக மாற்றி மக்களுக்கான பிரச்னைகளுக்கு துணை நிற்க வைக்கும் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் ஏகப்பட்ட சமரசம் செய்திருக்கிறார் இயக்குநர்.
தேவையற்ற சண்டைக்காட்சிகளால் நாயகனுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் வில்லன் கதாபாத்திரத்தை பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக ‘மீட்பர்’, ‘தியாகி’ என்ற அடைப்புகளுக்குள் நாயகனை அடைத்து புனிதப்படுத்த வைக்கப்பட்டுள்ள ‘க்ளிஷே’ க்ளைமாக்ஸ் பார்த்து புளித்தவை,” என்று இந்து தமிழ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.அதைப் பின்தொடர்ந்து வரும் சில காட்சிகள் தேவையற்றவையாகவே கருதலாம் ஆகியவை படத்தின் பலவீனங்களாக இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழுத்தமான கதை, வித்தியாசமான திரைக்கதை
விளிம்பு நிலை மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததற்கு சிவகார்த்திகேயனை பாராட்டலாம் எனக் குறிப்பிட்டுள்ள அதன் விமர்சனம், தனது வழக்கமான காதல், ரொமான்ஸ், இளைஞர்களைக் கவரும் ஜாலியான ‘டான்’ கதாபாத்திரங்களில் இருந்து விலகி கன்டென்டை நோக்கி நகரும் அவரது முதிர்ச்சி கவனிக்க வைப்பதாக பாராட்டியுள்ளது.
“அடித்தட்டு மக்களில் ஒருவராக எதார்த்த நடிப்பில் கவனம் பெறுகிறார் சரிதா. அரசியல்வாதியாக பொருந்திப் போகும் மிஷ்கின் கோவப்பட்டு கத்தும் இடங்களில் ‘சவரக்கத்தி’ பட கதாபாத்திரத்தை பிரதிபலிக்காமல் இல்லை. அசால்ட்டாக டைமிங்கில் ஸ்கோர் செய்யும் யோகிபாபுவை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதேநேரம் சுனில் கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டுள்ளது. தங்கையாக மோனிஷா நடிப்பில் குறைவைக்கவில்லை.”
பிற்பகுதியில் வரும் லைட்டிங் செட் அப், சிவாவுக்கும் மிஷ்கினுக்குமான லோ ஆங்கிள் ஷாட், அடுக்குமாடி குடியிருப்பை காட்சிப்படுத்தியிருந்த விதம் என விது அய்யனாவின் ஒளிப்பதிவு கவனிக்க வைப்பதாகவும் இந்து தமிழ் பாராட்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக அழுத்தமான கதையை வித்தியாசமான திரைக்கதையுடன் அணுக முயன்று ‘மாவீரன்’ சில சமரசங்களுக்குள் சிக்கிக்கொண்டதால், படத்தின் முற்பகுதி போல பிற்பகுதியில் போதிய பாய்ச்சலை நிகழ்த்தவில்லை எனவும் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் ஒரு மிக நீளமான ஃபேண்டஸி எண்டர்டெயினரில் ஜொலிப்பதாக குறிப்பிட்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா ‘மாவீரன்’ பட விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது.
வணக்கம்