கொழும்பு தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது போதைப்பொருள் வழங்கிய பிரதான இரு சந்தேக நபர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (17)போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரான இரு சந்தேக நபர்களை கைதுசெய்ய முற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 9 பேர் கொழும்பு தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான இரு சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த இரு சந்தேக நபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று கொழும்பு தெற்கு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நுழைந்துள்ளனர்.
அவர்களை பின்தொடர்ந்து துரத்திச்சென்று அவர்களை கைதுசெய்ய முற்பட்ட போது அங்கிருந்த சில நபர்கள் பொலிஸாரை தடுத்ததுடன் தாக்குதலை மேற்கொண்டு அவர்கள் மீது பெற்றோல் ஊற்றி தீ வைக்க முற்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் தப்பிச்சென்றுள்ளனர்.
தொடர்ந்தும் சில நபர்கள் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் ஆயுதங்களால் தாக்க முற்பட்ட போது பாதுகாப்பிற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதையடுத்து இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையாற்ற விடாமல் தாக்கிய சந்தேக நபர்களும் அவர்கள் வைத்திருந்த இரண்டு பொற்றோல் போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24, 44 வயதுடைய ஆண்களும் 30, 54 மற்றும் 60 வயதுடைய பெண்களும் ஆவர்.
இவர்கள் நேற்று கொழுப்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பிச்சென்ற இரு பிரதான சந்தேக நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் கொழும்பு தெற்கு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.