காவிரி நதி நீர் சிக்கல் தொடர்பாக கர்நாடக வாழ் மக்களுக்கு வ.கௌதமன் அவர்கள் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்., அவ்வறிக்கையில் உள்ள விபரத்தை இங்கே முழுமையாக பார்க்கலாம்.
சகோதரத்துவத்தை சிதைக்காதீர்கள். காவிரி என்பது மொழிப் பிரச்சனையோ இனப் பிரச்சனையோ அல்ல; அது தண்ணீர் பிரச்சனை.
அன்பான கர்நாடக வாழ் மக்களுக்கு வ.கௌதமன் வேண்டுகோள்.
ஒரு ஆறு தொடங்கும் இடத்திற்கான உரிமையை விட, கடைமடையில் அது வந்து சேரும் இடத்திற்கே அதிகப்படியான உரிமை உண்டு என்கிறது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆறுகளுக்கான உலகின் சட்ட வரையறை. அப்படியிருக்க இந்த ஆண்டு குறுவை சாகுபடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பத்து லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் கருகி பொடிந்த பின்பும் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் மீண்டும் மீண்டும் ஆணையிட்ட பின்பும் கூட தமிழ்நாட்டிற்கு இதற்கு மேல் ஒரு சொட்டு கூட தண்ணீர் தர முடியாது என சில கன்னட அமைப்புகளும், ஒரு சில கன்னட விவசாய சங்கங்களும போராடுவதோடு அவர்களோடு இணைந்து கன்னட அரசும் செயல்படுவது என்பது மனிதநேயமற்ற செயல் என்பதை தமிழனாக மட்டுமல்ல ஒரு மனிதனாக நாங்கள் என்றும் மதிக்கின்ற கர்நாடக வாழ் சகோதர, சகோதரிகளுக்கு உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசம் விடுதலை பெற, முதன் முதலில் போராட்டத்தை தொடங்கியவர்கள் தமிழர்கள். சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை நித்தம் நித்தம் உரிமையை இழந்து உயிரையும் இழந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். 1972 ஆம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் 372 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தது. நாளடைவில் அந்த எண்ணிக்கை குறைந்து 1991 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆண்டொன்றுக்கு அது 205 டிஎம்சியாக குறைந்தது. மீண்டும் இரு மாநிலப் பிரச்சனையில் 2007 ஆம் ஆண்டு அது 192 டிஎம்சியாக குறைந்து 2018 ஆம் ஆண்டு 177 டிஎம்சியாக இன்னும் குறைந்து இன்று அதுவும் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நெற்பயிர்களும் சாகிறது. விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் உள்ள 29 லட்சம் ஏக்கர்களுக்கான நீர்ப்பாசனமும் சென்னை உட்பட 23 மாவட்டங்களுக்கான குடிநீர் தேவையும் காவிரியை நம்பியே இருக்கின்றது என்பதனை எங்களின் கர்நாடக இளைய தலைமுறையினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
1991 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பா அவர்களின் ஆட்சிக்காலத்தில், இன்று போலவே அன்றும் நீதி மன்றங்களும் நடுவர் மன்றங்களும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர ஆணையிட்டன. நியாயம் அறிந்தும் சில கன்னட தலைவர்கள் திட்டமிட்டு ஒரு பெரும் கலவரத்தை கர்நாடக மண்ணில் விதைத்தார்கள். மாநிலங்கள் பிரிக்கப்படாத காலத்திலேயே பெங்களூரு மண்ணில் பூர்விகமாக வாழ்ந்தவர்களுள் இரண்டு லட்சம் தமிழர்கள் தங்களுடைய வீடு கடைகள் மற்றும் நிறுவனங்களை “தீ”க்கு பலி கொடுத்துவிட்டும், பல்லாயிரக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள தங்களின் உடைமைகளை இழந்தும் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் கைக்கால்களை இழந்து முடமாகிப் போனார்கள். எண்பதிற்கும் மேற்பட்ட தமிழர்கள் சில கன்னடர்களால் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். சத்தியத்தில் நின்று சொல்கிறேன். ஒரு பச்சிளம் குழந்தையை துணி துவைப்பது போல் தரையில் அடித்து ரத்தமும் சகதியுமாக சாக்கடையில் தூக்கி வீசினார்கள். பத்துக்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் துரத்தும் கூட்டத்திடமிருந்து தப்பி ஓடிவந்து கர்நாடகாவின் ராமாபுரம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து கெஞ்சியபோது அங்குள்ள காவலர்களால் மிகக் கொடூரமாக வன்புணர்ச்சி செய்யப்பட்டார்கள். ஈடு செய்ய முடியாத பெரு வலியில் நாங்கள் துடித்த போதும் கூட நாகரிகம் காத்து அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்ற கன்னடர்களோடு அண்ணன் தம்பியாக, சகோதர சகோதரிகளாக பேரன்போடு பழகி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கன்னடர்கள் தமிழ்நாட்டில் இருபதிலிருந்து இருபத்தைந்து இலட்சம் பேர்கள் வாழ்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. எங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட ஒரு அமைச்சர், ஐந்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு மாநகராட்சி மேயர்மென இன்னும் எண்ணற்ற அரசின் உயர் பதவிகளில் இன்றும் மரியாதையோடு ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியும் ஏறத்தாழ 80 லட்சம் தமிழர்கள் கர்நாடகாவில் வாக்காளர்களாக இருந்தும் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இல்லை என்பது எவ்வளவு பெரிய எதார்த்தத்தின் பேருண்மை. கர்நாடகத்தில் பிறந்த ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக திரைத்துறையில் கோலொச்சிக் கொண்டிருக்கிறார். தமிழர்களின் எண்ணிக்கையை விட கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட எண்ணற்றவர்கள் இங்கு நடிகர் நடிகையர்களாக வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இனம், மொழி என எந்த பேதமும் பார்க்காமல் உங்களை சக உறவுகளாக கொண்டாடிக் கொண்டிருக்கின்ற தமிழினத்தை பார்த்து, கன்னட தலைவர் ஒருவர் “உங்கள் முதல்வரிடம் சொல்லி ஒரு ரயிலை அனுப்ப சொல்லுங்கள் இங்குள்ள தமிழர்களை அள்ளிக் கொண்டு போக” என்று எள்ளி நகையாடுகிறார். இவற்றையெல்லாம் இனி இளைய தலைமுறையினரான நீங்கள்தான் புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டும்.
இந்திய ஒருமைப்பாடு என்பது எல்லா மாநிலத்திற்கும் பொதுவானது என்பதை நேர்மையற்ற கலகக்காரர்களுக்கு துணிச்சலோடு எடுத்துச் சொல்லுங்கள். எத்தனையோ முறை உயிரிழப்பும், பொருளிழப்பும், மானமிழப்பும் எங்களுக்கு நிகழ்ந்தும் கூட அண்டை மாநிலமான எங்களின் கர்நாடக மக்களின் மீது நாங்கள் வன்மம் காட்டியதில்லை. இங்கு இருக்கின்ற ஒரே ஒரு கன்னட நிறுவனத்தைக் கூட தாக்கியதும் இல்லை. இங்கு வாழ்கின்ற எங்களுடைய கன்னட சகோதர, சகோதரிகளை அசிங்கப்படுத்தியதும் இல்லை. ஆனால் இன்று கர்நாடக மண்ணில் 1991 ஆம் ஆண்டை விட மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த சில கன்னட தலைவர்கள் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். அரசு தடுக்கிறதோ இல்லையோ அன்புள்ளம் கொண்ட நேர்மையான கர்நாடக வாழ் மக்களும், எங்களுடைய இளைய சகோதர சகோதரிகளும் அதனை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உலகம் முழுக்க சென்று போரிட்டு வென்று ஒரு பேரரசையே கட்டியாண்ட இராச இராச சோழனின் வழிவந்த தமிழினம் உங்களோடு என்றும் பேரன்பை செலுத்த மட்டுமே காத்திருக்கிறது என்பதை மீண்டும் உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச்செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
01.10.2023